மின் பயன்பாடு கணக்கெடுப்பில் புதிய முறை... மொபைல் செயலி அறிமுகம்... மக்கள் மகிழ்ச்சி


ஸ்மார்ட் மீட்டர்

மின் கட்டணம் கணக்கிடுவதில் இருந்த சிக்கல்களை களைவதற்கு தோதாக மொபைல் செயலி மூலமாக மின் கட்டணம் கணக்கிடும் முறை தமிழ்நாட்டில் சில பகுதிகளில் நடைமுறைக்கு வந்துள்ளது.

வீடுகள், சிறு தொழிற்சாலைகளை உள்ளடக்கிய தாழ்வழுத்த பிரிவில், மின் பயன்பாட்டை கணக்கெடுக்க, மீட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன. இரு மாதங்களுக்கு ஒரு முறை ஊழியர்கள் நேரில் சென்று, மீட்டரில் பதிவாகியுள்ள மின் பயன்பாட்டை கணக்கெடுத்து, அலுவலகம் வந்து அந்த விவரத்தை கணினியில் பதிவேற்றம் செய்கின்றனர்.

கணக்கெடுக்கும் ஊழியர்கள் சிலர் நேரில் செல்லாமல் இஷ்டத்திற்கு கணக்கு எடுக்கின்றனர். ஆகையால் மின் நுகர்வோர் கட்டண விஷயத்தில் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இந்த முறைகேட்டை தடுக்கவும், உடனே மின் கட்டணத்தை நுகர்வோருக்கு தெரிவிக்கவும், தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் மொபைல் செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தச் செயலி, கணக்கெடுக்க செல்லும் ஊழியர்களின் மொபைல் போனில் பதிவேற்றம் செய்து தரப்பட்டுள்ளது.

இது தவிர, ஆப்டிகல் கேபிளும் தனியாக வழங்கப்படுகிறது. அந்த கேபிளை, மீட்டர் மற்றும் மொபைல் போனுடன் இணைக்க வேண்டும். பின், மொபைல் செயலியை இயக்கியதும், மீட்டரில் பதிவாகியுள்ள மின் பயன்பாட்டு விவரம், செயலியில் பதிவேற்றப்படும். அதற்கான கட்டணம் உடனே கணக்கிடப்பட்டு, அலுவலக, ‘சர்வர்’ மற்றும் நுகர்வோரின் மொபைல் போன் எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் செல்லும்.

கடந்த ஆகஸ்ட் முதல் 60,000 தொழில் மற்றும் வணிக இணைப்புகளில், மொபைல் செயலி வாயிலாக மின் பயன்பாடு கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. இந்த முறையில் கணக்கெடுப்பு விவரம் துல்லியமாக பதிவாவதை, மின் வாரியம் உறுதி செய்துள்ளது. எனவே, இத்திட்டம் வீடுகளில் மின் பயன்பாட்டை கணக்கெடுக்கவும் விரிவுபடுத்தப்பட உள்ளது.

இதற்காக, சோதனை முறையில், அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய, 44 மின் பகிர்மான வட்டங்களிலும் தலா, 10 பிரிவு அலுவலகங்களில் வீடுகள், கடைகள் போன்றவற்றில், இன்று முதல் மொபைல் செயலியில் கணக்கெடுக்குமாறு, மேற்பார்வை பொறியாளர்களுக்கு, மின் வாரியம் உத்தரவிட்டுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

x