ராமேஸ்வரம்: கடலுக்கு அடியில் தேசிய கொடியேந்தி சுதந்திர தின கொண்டாட்டம்


ராமேசுவரத்தில் கடலுக்கு அடியில் நடைபெற்ற தேசியக் கொடியை ஏந்தி நீச்சல்.

ராமேசுவரம்: 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ராமேஸ்வரத்தில் கடலுக்கு அடியில் தேசியக் கொடியை ஏந்தி மீன்வளத்துறை சார்பாக சுதந்திர தினம் கொண்டாடப்பட்து.

78வது சுதந்திர தினத்தை விழாவை சிறப்பிக்கும் ராமநாதபுரம் மாவட்ட மீன்வளத்துறையினர் சார்பாக ராமேஸ்வரம் கடற்பகுதியில் கடலுக்கு அடியில் மூவர்ணக் கொடியை பிடித்துக் கொண்டு நீச்சல் அடித்தனர். காற்றில் அசைந்தாடும் கொடியை போல், கடல் நீரிலும் அசைந்து கொடுத்த கொடியைப் பார்க்கையில் உணர்ச்சி பொங்கும் தருணமாக அமைந்திருந்தது.

இந்த நிகழ்ச்சியில் மீன்வளத்துறை இயக்குநர் பிரபாவதி, கூடுதல் இயக்குனர் அப்துல் காதர் ஜெய்லானி, ஆழ்கடல் நீச்சல் பயிற்சியாளர் அரவிந்த் தருண் ஸ்ரீ ஆகியோர் முன்னிலை வகித்தனர். தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரை பகுதியில் கிரந்தி பிரஜா சங்கம் சார்பில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் 78 அடி நீளம் உடைய தேசிய கொடி ஏந்தி ஊர்வலம் நடைபெற்றது.

தனுஷ்கோடி அரிச்சல்முனையில் நடைபெற்ற 78 அடி நீள தேசிய கொடி ஏந்தி ஊர்வலம்

நிகழ்ச்சிக்கு பிரஜா சங்கத்தின் தலைவர் முரளி மோகன் முதிராஜ் தலைமை வகித்தார். தனுஷ்கோடி கிராம தலைவர் உமையேஷ்வரன், செயலாளர் குருசாமி, திமுக நிர்வாகி கருப்பையா, பாஜக நிர்வாகி முருகன், மீனவர் கூட்டுறவு சங்க தலைவர்கள் குமரேசன், செல்லத்துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் நீளமான தேசிய கொடியுடன் மீனவர்கள், சுற்றுலாப் பயணிகள் ஊர்வலம் சென்றனர். தொடர்ந்து. தனுஷ்கோடி அரிச்சல்முனை ரவுண்டான அருகில் நிகழ்ச்சிகள நடைபெற்றது.

ராமேசுவரம் கிளை நூலகத்தில் நடைபெற்ற கொடியேற்று விழாவில் தேசிய கொடியை வர்த்தக சங்கத் தலைவர் சந்திரன் கொடியேற்றினார். சுதந்திரத்தின் சிறப்பு பற்றி கலை இலக்கிய பெருமன்ற நிர்வாகி சி.செந்தில்வேல் உரையாற்றினார். பாம்பன் கிளை நூலகத்தில் வாசகர் வட்டத் தலைவர் முத்து வாப்பா சுதந்திர தின கொடியேற்றினார். நரசிங்கக்கூட்டம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமையாசிரியர் ச.கிறிஸ்து ஞான வள்ளுவன் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.

x