சுதந்திர தின விழாவில் இரு கோஷ்டியாக பிரிந்து காங்கிரஸார் வாகனப் பேரணி @கும்பகோணம்


கும்பகோணம்: கும்பகோணத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் காங்கிரஸார் 2 கோஷ்டியாக பிரிந்து இரு சக்கர வாகனப் பேரணி நடத்தினர்.

சுதந்திரத்தினத்தன்று, இரு சக்கர வாகனப் பேரணி செல்ல வேண்டும் எனக் கட்சி நிர்வாகிகளுக்கு, காங்கிரஸ் கட்சித் தலைமை உத்தரவிட்டிருந்தது. அதன்படி, கும்பகோணம் வடக்கு மாவட்டத் தலைவர் டி.ஆர்.லோகநாதன் தலைமையில், மாநகரத் தலைவர் கே.மிர்சாவூதீன் முன்னி்லையில் 30-க்கும் அதிகமானோர் காவிரி நகரில் உள்ள மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் இருந்து இருசக்கர வாகனங்களில் ஊர்வலமாக புறப்பட்டு, பிரதான வீதிகள் வழியில் உள்ள காந்தி, நேரு, இந்திராகாந்தி சிலைகளுக்கு மாலை அணிவித்து, கும்பகோணம் சாரங்கபாணி சன்னதி தெருவில் உள்ள மாநகர காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் முடித்தனர்.

இதே போல் காங்கிரஸ் மேயர் அணியினர் நடத்திய இரு சக்கர வாகனப்பேரணி கும்பகோணம் சாரங்கபாணி சன்னதி தெருவில் உள்ள மாநகர காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு பிரதான வீதிகளில் வழியாகச் சென்று 20 இடங்களில் தேசியக் கொடியேற்றி வைத்து தாராசுரத்தில் பேரணியை நிறைவு செய்தனர்.

இந்தப் பேரணிக்கு விவசாயப் பிரிவு மாவட்டத் தலைவர் ஓ.வி.கே.கிருஷ்ணசாமி தலைமை வகித்தார். மாநகர மேயர் க.சரவணன், விவசாயப் பிரிவு மாநிலப் பொதுச் செயலாளர் ஓ.வி.கே.வெங்கடேஷ் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சி மாநகரத் தலைவர் மற்றும் மேயர் என இரு கோஷ்டியாக பிரிந்து, கும்பகோணம் மாநகரப் பகுதிக்குள் தனித்தனியாக வாகனப் பேரணி சென்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

x