போதையில்லா தமிழகம்: உதகையில் 10 கி.மீ. தூரம் மாணவர்கள் சுதந்திர தின மாரத்தான் ஓட்டம்!


உதகை: போதையில்லா தமிழகத்தை உருவாக்குவோம் என்ற விழிப்புணர்வோடு உதகையில் சுதந்திர தின மாரத்தான் ஓட்டம் நடந்தது.

நாடு முழுவதும் இன்று 78வது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் உதகையில் மாணவ மாணவிகளுக்கு 10 கிலோ மீட்டர் தூரம் விழிப்புணர்வு ஓட்டம் நடைபெற்றது. உதகையில் இருந்து குன்னூர் செல்லக்கூடிய சாலையிலுள்ள பள்ளி முன்பு தொடங்கிய இந்த விழிப்புணர்வு ஓட்டத்தை கூடுதல் எஸ்.பி சௌந்தரராஜன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

உதகை நகரில் இருந்து முக்கிய சாலைகள் வழியாக தலைக்குந்தா வரை 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு இந்த விழிப்புணர்வு ஓட்டம் நடைபெற்றது.

இது குறித்து கூடுதல் எஸ்பி சௌந்தரராஜன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ''தமிழகத்தில் போதை விழிப்புணர்வுகள் அதிக அளவில் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த சுதந்திர தின விழாவில் மாணவ மாணவிகள் போதை இல்லா தமிழகம் நீலகிரியின் இயற்கையைக் காப்போம் என்ற நோக்கத்தோடு இந்த மாரத்தான் போட்டியில் பங்கேற்றுள்ளனர் அவர்களுக்கு வாழ்த்துக்கள். அதேபோல் போதை பழக்கம் எவ்வளவு தவறானது என்பதை உணர்த்தவும் நீலகிரியின் இயற்கை வளத்தைக் காக்கவும் விழிப்புணர்வு ஓட்டம் நடைபெறுகிறது'' என்றார்.

x