ஆளுநர் தேநீர் விருந்தில் முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் பங்கேற்கிறார்கள்!


இன்று நாட்டின் 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்பார்கள் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். முன்னதாக ஆளுநரின் தேநீர் விருந்தை திமுக கூட்டணி கட்சிகள் புறக்கணிக்கப் போவதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இன்று 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்தில் பங்கேற்க அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆளுநரின் தேநீர் விருந்தில் கலந்து கொள்ளாமல் புறக்கணிக்கப் போவதாக திமுக உட்பட அதன் கூட்டணி கட்சிகள் அறிவித்திருந்தன. 'திமுக சார்பில் ஆளுநரின் தேநீர் விருந்தில் யாரும் பங்கேற்கமாட்டார்கள். ஆனால் தமிழ்நாடு அரசு சார்பில் பங்கேற்பது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பார்' என்று திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று தலைமை செயலகத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது, 'ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று அளிக்கும் தேநீர் விருந்தில் தமிழ்நாடு அரசு சார்பில் பங்கேற்கிறோம். ஆளுநர் என்ற பதவிக்கு மதிப்பளித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் தமிழ்நாடு அரசின் அமைச்சர்கள் தேநீர் விருந்தில் பங்கேற்பர்' என தெரிவித்தார்.

x