உச்ச நீதிமன்றம் அறிவுறுத்திய பிறகும் தமிழக அரசுடனான தனது மோதல்போக்கை இன்னமும் மாற்றிக்கொள்ளவில்லை ஆளுநர் ஆர்.என்.ரவி. அதனால் தான் சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் விவகாரம், காவி திருவள்ளுவர் என பிரச்சினைக்குரிய காரணிகளை கையில் எடுத்து கம்பு சுற்றுகிறார்.
தமிழக அரசு எதைச் செய்தாலும் அதற்கு மாறாக எதையாவது செய்யமுடியுமா என்பதே ஆளுநரின் யோசனையாக இருக்கிறது. மசோதாக்களை கிடப்பில் வைத்ததில் தொடங்கி, சனாதன சர்ச்சை வரைக்கும் திராவிட மாடலுக்கும் தமிழ்நாட்டுக்கும் எதிரான கொடியையே ஆளுநர் உயர்த்திப்பிடிக்கிறார் என குமுறுகிறது திமுக.
ஆளுநரை கொஞ்சம் அடக்கிவைக்க வேண்டும் என்பதற்காகவே இந்த விவகாரத்தை உச்ச நீதிமன்றத்துக்கு கொண்டு போனது தமிழக அரசு. “தமிழக முதல்வருடன் கலந்துபேசி பிரச்சினை களை தீர்த்துக்கொள்ள வேண்டும்” என்று உச்சநீதிமன்றமும் ஆளுநருக்கு புத்தி சொன்னது. அதையேற்று ஆளுநரும் முதல்வருக்கு அழைப்பு விடுத்தார்.
கடந்த டிசம்பர் 30-ம் தேதி ஆளுநர் மாளிகைக்குச் சென்று அவரைச் சந்தித்தார் முதல்வர் ஸ்டாலின். அதுசமயம், மாதக் கணக்கில் ஆளுநர் மாளிகையில் கிடப்பில் இருக்கும் அரசின் கோப்புகளுக்கு விரைந்து ஒப்புதல் அளித்திட வேண்டுமென்று ஆளுநரிடம் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியதாகச் சொல்லப்பட்டது.
அதேபோன்று ஆளுநரால் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்ட முக்கிய மசோதாக்களை திரும்பப்பெற்று, அவற்றுக்கு விரைந்து ஒப்புதல் அளித்திடவும் ஆளுநரை முதல்வர் கேட்டுக் கொண்டதாகச் சொல்லப்பட்டது. இந்தச் சந்திப்புக்குப் பிறகு, ஏற்கெனவே தன்னால் அமைக்கப்பட்ட பல்கலைக் கழகங்களுக்கான துணைவேந்தர்கள் தேடுதல் குழுவை கலைத்து உத்தரவிட்டார் ஆளுநர். இதையெல்லாம் பார்த்துவிட்டு ஆளுநருக்கும் முதல்வருக்கும் இடையில் சுமூகநிலை எட்டப்பட்டுவிட்டதாக பலரும் நிம்மதி கொண்டார்கள்.
ஆனால், அது ரொம்ப நாள் நீடிக்கவில்லை. ஆளுநரால் அடையாளம் காட்டப்பட்ட சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் முறைகேடு வழக்கில் சிக்கினார். அவர் மீது வழக்குத் தொடரப்பட்டு கைதும் செய்யப்பட்டார். இப்படியான சூழலில், ஆளுநர் ஜெகநாதனை தனிப்பட்ட முறையில் சந்தித்துப் பேசியது பெரும் சர்ச்சையானது.
பல்கலைக்கழகங்களின் வேந்தரான ஆளுநர், துணைவேந்தர் ஒருவர் தவறு செய்திருப்பதாக புகார் வந்தால் அவர் மீது நடவடிக்கை எடுப்பதை உறுதிப்படுத்த வேண்டும். அதை விடுத்து அவரை சந்தித்து உரையாரியதும் அவருக்கு ஆதரவாக இருப்பது போல் காட்டிக்கொண்டதுமான போக்கு ஒரு தவறான முன்னுதாரணமாகவே பார்க்கப்படுகிறது.
இந்தச் சர்ச்சை அடகுவதற்குள் திருவள்ளுவருக்கு காவி பூசும் சர்ச்சைக்குள் சிக்கினார் ஆளுநர். தான் விடுத்த திருவள்ளுவர் தின வாழ்த்துத் செய்தியில், 'கவிஞரும், சிறந்த தத்துவஞானியும், பாரதிய சனாதன பாரம்பரியத்தின் பிரகாசமான துறவியுமான திருவள்ளுவர்' என புகழாரம் சூட்டினார் ஆளுநர். இதிலுள்ள ‘பாரதிய சனாதன பாரம்பரியத்தின் பிரகாசமான துறவி’ என்ற பாஜகவின் வாசகங்கள் பலரையும் ஆத்திரம் கொள்ளவைத்தது.
ஆளுநர் இத்தோடு நிறுத்தவில்லை... திருவள்ளுவருக்கு காவி உடை அணிவிக்கப்பட்ட படத்தையும் பகிர்ந்திருந்தார். ராமநாதபுரம் கேம்பில் இருந்த அவர் அரசு சுற்றுலா மாளிகையில், காவி உடைதரித்த திருவள்ளுவர் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். ஆளுநர் வலிந்து செய்த இந்தச் செயலும் முதல்வரையும் திராவிட வட்டத்தையும் கொந்தளிக்கச் செய்தது. வள்ளுவருக்கு காவி பூசும் கலாச்சாரத்தைக் கொண்டுவந்ததும் பாஜக என்பது குறிப்படத்தக்கது.
இதற்கு உடனடியாக ரியாக்ட் செய்த முதல்வர் ஸ்டாலின், ’’பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமூகநீதிக் கோட்பாட்டையும், முயற்சி மட்டுமே வெற்றியைத் தரும் என்ற தன்னம்பிக்கை ஊக்கத்தையும், அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை என்ற கருத்தியலையும் வழிகாட்டியவர் வள்ளுவர். 133 அடியில் சிலையும், தலைநகரில் கோட்டமும் அமைத்துப் போற்றும் குறளோவியத் தமிழ்நாட்டில் வள்ளுவரை யாரும் கறைபடுத்த முடியாது” என்று கொஞ்சம் காட்டமாகவே பதிலளித்தார்.
மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் பாஜக தலைவர்கள் போலவே தனது எண்ணத்தையும் செயலையும் மாற்றிக் கொண்டு வருகிறார் ஆளுநர். பிரதமர் மோடி எதைச் செய்கிறாரோ, சொல்கிறாரோ அதை அப்படியே பின்பற்றும் தளபதியாகவே இருக்கிறார் ஆளுநர்.
எதைத் தொட்டால் தமிழ்நாட்டில் எதிர்ப்புக் குரல்கள் கிளம்பும் என தேடிக் கண்டுபிடித்து பிரச்சினைகளை கையில் எடுக்கிறார் ஆளுநர். இதுகுறித்து பாஜக மாநில துணைத்தலைவர் வி.பி.துரைசாமியிடம் பேசினோம்.
"ஆளுநர் எந்தத் தவறான காரியத்தையும் செய்யவில்லை; செய்யவும் மாட்டார். ஆனால், தவறு செய்யும் மாநிலத்துக்கு வந்துவிட்டார்; அவ்வளவுதான். உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது நிலுவையில் இருந்த மசோதாக்கள் விவகாரம் குறித்துத்தான். அதில் நீதிமன்றம் சொன்னதை அவர் செய்துவிட்டார். அதில் ஒன்றும் பிரச்சினை இல்லை. திருவள்ளுவர் விவகாரத்தில் அவர் என்ன நோக்கத்துக்காக அப்படிச் செய்தார் என்று தெரியவில்லை. ஆனால், ஆதாரம் இல்லாமல் அவர் அப்படிச் செய்திருக்கமாட்டார்.
திருவள்ளுவர் அனைத்து மதத்தினருக்கும், நாட்டினருக்கும் சொந்தமானவர். பெரியார் பல்கலைக் கழக துணைவேந்தர் விவகாரத்தில் தனக்கு என்ன உரிமையும், கடமையும் உள்ளதோ அதைத்தான் செய்திருக்கிறார் ஆளுநர். உண்மை என்னவென்று விசாரிப்பது வேந்தராக அவரது கடமை. தவறு இருக்குமானால் தண்டிக்கவும் அவருக்கு உரிமை இருக்கிறது. ஆக, ஆளுநர் தனது பொறுப்பை உணர்ந்து கடமையாற்றி வருகிறார். அதை இவர்கள் தான் அரசியலாக்குகிறார்கள்” என்றார் அவர்.
எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர்களை வைத்து பாஜக போட்டி ராஜ்ஜியம் நடத்துவதாக எதிர்க்கட்சிகள் புலம்புகின்றன. ஆளுநர்கள் மாநில அரசுகளுக்கு எதிராக அப்படி திரும்பி நிற்பது நல்லதல்ல என்பதால் தான் ஆளுநர் - முதல்வர் மோதலை முடிவுக்குக் கொண்டுவர உச்ச நீதிமன்றம் ஒரு உபாயத்தைச் சொன்னது. ஆனாலும் நான் அப்படியே தான் இருப்பேன் என்று சொல்பவர்களை இனி என்னதான் செய்யமுடியும்?