நாகப்பட்டினம்: வேதாரண்யம் அருகே உள்ள ஆறுகாட்டுத்துறையில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் 4 பேரை இலங்கை மீனவர்கள் ஆயுதங்களால் தாக்கி, வலையைப் பறித்துச் சென்றதாகப் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகேயுள்ள ஆறுகாட்டுத்துறை மீனவக் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரகாசன்(70). இவருக்குச் சொந்தமான விசைப்படகில் ஆறுகாட்டுத்துறையைச் சேர்ந்தமுத்துகிருஷ்ணன்(70), ராஜேஷ்(26), பன்னீர்செல்வம்(50), வேல்முருகன்(36) ஆகிய 4 மீனவர்கள் நேற்று முன்தினம் கடலுக்குச் சென்றனர்.
கோடியக்கரைக்கு கிழக்கே 15 கடல் மைல் தொலைவில் நேற்று முன்தினம் இரவு மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு 2படகுகளில் வந்த இலங்கை மீனவர்கள் 6 பேர், ஆறுகாட்டுத்துறை மீனவர்களின் படகில் ஏறி 4 மீனவர்களையும் ஆயுதங்களால் தாக்கி, படகில் இருந்த 700 கிலோவலைகளைப் பறித்துச் சென்றனர்.
தாக்குதலில் காயமடைந்த 4 மீனவர்களும் நேற்று பிற்பகல்ஆறுகாட்டுத்துறை கடற்கரைக்குத் திரும்பினர். பின்னர் அவர்கள் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்த புகாரின்பேரில், வேதாரண்யம் கடலோரக் காவல் நிலைய போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த 11-ம் தேதி ஆறுகாட்டுத்துறை மீனவர்களை இலங்கை மீனவர்கள் தாக்கிய நிலையில், மீண்டும் இதேபகுதி மீனவர்களை இலங்கை மீனவர்கள் தாக்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திஉள்ளது