மாநில முதல்வராக பட்டியலினத்தவர் வர முடியுமா? திருமாவளவன் பேசியதை வரவேற்கிறேன்: சீமான் கருத்து


திருப்புவனம்: மாநில முதல்வராக பட்டியலினத்தவர் வர முடியாத சூழ்நிலை உள்ளதாக திருமாவளவன் பேசியதை வரவேற்கிறேன் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.

சென்னையில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் "உத்தர பிரதேசத்தில் மாயாவதி முதல்வரானது விதிவிலக்கான ஒன்று. எந்த சூழலிலும், எந்த காலத்திலும் ஒரு பட்டியலினத்தவர் மாநிலத்தின் முதல்வராக முடியாது.

நமக்கு திமுக அரசு மீது நம்பிக்கை இருக்கிறது. ஆனால், திமுக அரசு நிலையானது அல்ல, மாநில அரசுதான் நிலையானது. மாநில அரசு, எந்த சூழலிலும் ஒரு பட்டியலினத்தவரை முதல்வராக ஏற்றுக் கொள்ளும் நிலை இங்கே இல்லை. வர முடியாது" என்று பேசினார். இந்தக் கருத்தை சீமான் வரவேற்றுள்ளார்.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே நெல்முடிக்கரையில் நாம் தமிழர் கட்சி முன்னாள் பொதுச்செயலாளர் தடா சந்திரசேகரன் முதலாண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் கட்சியின் தலைமை ஒருங்கினைப்பாளர் சீமான், இலங்கை எம்.பி. சிறீதரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் சீமான் கூறியதாவது: மாநில முதல்வராக பட்டியலினத்தவர் வர முடியாத சூழ்நிலை உள்ளதாக திருமாவளவன் கூறியதை வரவேற்கிறேன். ஆதிதிராவிட நலத் துறையைத் தவிர, வேறு எந்த துறையை பட்டியலினத்தவருக்கு கொடுத்துள்ளனர். உங்கள் வீட்டுக்குள் இருந்துதான் துணை முதல்வர் வர வேண்டுமா, நாட்டுக்குள் வேறு யாருமே கிடையாதா?

நடிகர் விஜய் கட்சியின் அரசியல் மாநாடு நடைபெறாமல் இருக்க இடையூறு செய்கின்றனர். மாநாடு நடத்த இடம் தரக்கூடாது என்று நில உரிமையாளர்கள் மிரட்டப்படுவது சர்வாதிகாரமாகும். அதேபோல, குண்டர் தடுப்பு சட்டத்தில் சவுக்கு சங்கரை கைது செய்தது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாகும்.

இவ்வாறு சீமான் கூறினார்

x