கட்டுமானப் பணி: தவறான தகவலை வெளியிடுவோருக்கு மதுரை ‘எய்ம்ஸ்’ நிர்வாகம் எச்சரிக்கை


மதுரை: கட்டுமானப் பணி திட்டமிட்டபடி தொடங்கி நடப்பதாகவும், உண்மைக்கு புறம்பாக திரித்து தவறான தகவல்களை வெளியிடுவோரை மதுரை ‘எய்ம்ஸ்’ நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அலுவலர் ஹனுமந்தராவ் எச்சரித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், "மதுரை ‘எய்ம்ஸ்’ பற்றியும், அதன் கட்டுமானம் பற்றியும் தவறான தகவல்கள் பரப்பப்படுகிறது. உண்மை என்னவென்றால், ராமநாதபுரத்தில் மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி தற்காலிகமாக செயல்படுகிறது. மற்றொரு புறம் மதுரை தோப்பூரில், எய்ம்ஸ் கட்டுமானப்பணி தொடங்கி நடக்கிறது. ஆனால், திட்டமிட்டே பொதுமக்களிடம் பரபரப்பை உண்டாக்க திட்டமிட்டே திரித்து தவறான தகவல்களைப் பரப்புவது, எய்ம்ஸ் நிறுவனத்திற்கு நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதை நோக்கமாக கொண்டு செயல்படுவது தெளிவாக தெரிகிறது. இதுபோன்ற தவறான தகவலை வெளியிடுவோரின் செயலை வன்மையாக கண்டிக்கிறோம். எந்த தடையும் இல்லாமல் மதுரை ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை கட்டுமானப் பணி சென்று கொண்டிருக்கிறது.

கட்டுமானப் பணிகள் இன்னும் முடிவடையவில்லை என்று மீண்டும், மீண்டும் கூறப்பட்டு வருகிறது. கட்டுமானப்பணி 2024 மார்ச் மாதம் தொடங்கியுள்ளது. இந்த திட்டத்தின் பகுதி-1 பணிகள் முடிப்பதற்கே இன்னும் 18 மாதங்கள் காலம் உள்ளது. இந்த திட்டம் திட்டமிட்டப்படி எந்த தாமதமும் இல்லாமல் முடிக்கப்படும். மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை தேவையான நிதி, உதவி மற்றும் வழிகாட்டுதல்களை வழங்கி கொண்டிருக்கிறது.

எய்ம்ஸ் கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு தேவையான அனைத்து அத்தியாவசியமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகிறது. மேலும், இவர்கள் தங்கள் மருத்துவக்கல்வியை மேம்படுத்துக் கொள்வதற்காக, நாக்பூரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். எந்த வகையிலும், மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு வழங்கப்படும் மருத்துவக் கல்வி தரத்தையும் குறைத்து கொள்வதில் எந்த சமரசமும் இல்லாமல் செயல்படுகிறோம்.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் ஆசிரியர்கள் பணிக்கு எடுப்பது திட்டமிடப்படி நடப்பதால் ஆசிரியர் பற்றாக்குறை இல்லை என்பதை உறுதி செய்கிறோம். அனைத்து பணியிடங்களும் படிப்படியாக நிரப்பப்படும்" என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

x