குன்னூரில் கடும் பனிப்பொழிவு: வழி தெரியாமல் பள்ளத்தில் கவிழ்ந்த கார்


குன்னூர்: இன்று கடும் பனிப்பொழிவால் சாலையில் வழி தெரியாமல், பாலத்தில் இருந்து 25 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனிடையே குன்னூர் - மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் கடும் பனிமூட்டம் நிலவி வருவதால் சமவெளி பகுதிகளில் இருந்து வரக்கூடிய சுற்றுலாப் பயணிகள் வாகனங்களை இயக்க முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். இவ்வாறு வரும் சுற்றுலாப் பயணிகள் சாலை தெரியாததால், முகப்பு விளக்குகளை எரியவிட்டு கடும் சிரமத்திற்கிடையே வாகனங்களை இயக்கி வருகின்றனர்.

இந்நிலையில், கோவையில் இருந்து உதகை அருகே உள்ள அச்சனக்கல் கிராமத்துக்கு இன்று 3 பேர் காரில் வந்தனர். அப்போது வாகனத்தை ஒட்டி வந்த சபரீஷ் என்பவருக்கு, பனிமூட்டத்தால் சாலை தெரியாததால் பாலத்தில் இருந்து 25 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

விபத்தில் சிக்கிய மூவரையும் வாகன ஓட்டுநர்கள், தீயணைப்பு துறையினர் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மேலும், பள்ளத்தில் விழுந்த காரை போலீஸார் மீட்டனர்.

x