புதுச்சேரி: தாய்வழியிலும் மாணவர்களுக்கு சாதி சான்றிதழ் வழங்க அரசு நடவடிக்கை எடுக்கும் என புதுவை முதல்வர் ரங்கசாமி கூறியுள்ளார்.
புதுவை சட்டப்பேரவையில் இன்றைய கேள்வி நேரத்தின் போது பேசிய என்.ஆர்.காங்கிரஸ் உறுப்பினர் ஏ.கே.டி. ஆறுமுகம், "சாதி, குடியிருப்பு சான்றிதழ் பெறும் முறையை எளிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமா?” என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த முதல்வர் ரங்கசாமி,"பள்ளிகள் மூலம் நிரந்தர சான்றிதழ் வழங்குவதற்கு திட்டம் பரிசீலனையில் உள்ளது" என்றார்.
அப்போது திமுக எம்எல்ஏ-வான சம்பத், பாஜக எம்எல்ஏ-வான கல்யாணசுந்தரம், சுயேட்சை எம்எல்ஏ-வான நேரு ஆகியோர், ”சாதி சான்றிதழை ஆண்டுதோறும் புதுப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை. எனவே, நிரந்தரமாக சாதி சான்றிதழ் வழங்க வேண்டும். இந்த சான்றிதழ் பெற மாணவர்கள், பெற்றோர்கள் அலைக்கழிக்கப்படுகின்றனர்.
தந்தை இல்லாத மாணவர்களுக்கு சாதி சான்றிதழ் பெறுவதில் சிரமம் உள்ளது. தமிழகத்தில் தாய்வழியிலும் சாதி சான்றிதழ் அளிக்கின்றனர். அதேபோல புதுவையிலும் தாய் வழியிலும் சாதி சான்றிதழ் வழங்க வேண்டும். இதற்கு உயர்நீதிமன்ற ஆணை உள்ளது" என வலியுறுத்தினர்.
தொடர்ந்து இது தொடர்பான உயர்நீதிமன்ற ஆணையை நேரு எம்எல்ஏ, பேரவைத் தலைவர் செல்வத்திடம் அளித்தார். இதைத் தொடர்ந்து முதல்வர் ரங்கசாமி, "இனி தாய்வழியிலும் சாதி சான்றிதழ் வழங்க அரசு நடவடிக்கை எடுக்கும்" என உறுதியளித்தார்.