பிரதமர் மோடி ஸ்ரீரங்கம் வருகையையொட்டி அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவலர்களுக்கு கெட்டுப்போன உணவு விநியோகம் செய்யப்பட்டது. இது காவலர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள பிரதமர் மோடி நேற்று மாலை தமிழகம் வந்தார். நேற்று சென்னையில் கேலோ விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்த அவர், இன்று ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்தார். அதையொட்டி ஸ்ரீரங்கம் நகர் முழுமையும் தூய்மைப் பணியாளர்கள் களமிறக்கப்பட்டு ஸ்ரீரங்கத்தை தூய்மை செய்தனர். அப்பணியில் ஈடுபட்டிருந்த தூய்மைப் பணியாளர்களுக்கு நேற்று குப்பை அள்ளும் வாகனத்தில் உணவை கொண்டுவந்து வழங்கியது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
அந்த சர்ச்சையே இன்னும் முடியாத நிலையில், இன்று பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள காவலர்களுக்கு கெட்டுப்போன உணவு வழங்கப்பட்டது பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஶ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி இன்று சாமி தரிசனம் செய்தார். அவரது வருகையை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வந்திருந்த சுமார் 3,500-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு இன்று காலை வழங்கப்பட்ட உணவு சரியில்லை என போலீஸார் குற்றம் சாட்டியுள்ளனர்.
இன்று காலை அவர்களுக்கு உணவாக உப்புமா வழங்கப்பட்டது. அது கெட்டுப் போய் நாற்றம் எடுத்து இருந்ததால் காவலர்களால் அதை உண்ண முடியவில்லை. பெரும்பாலான காவலர்கள் அதை குப்பையில் கொட்டினர். ஏற்கெனவே கடந்த 2-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி திருச்சிக்கு வந்த போதும் இதேபோல கெட்டுப்போன உணவைத்தான் வழங்கியதாக போலீஸார் குற்றம் சாட்டுகின்றனர்.
முக்கிய பிரமுகர்களின் வருகையை முன்னிட்டு இரவு பகல் பாராமல், வெயில் மழை பாராமல் பாதுகாப்பு பணியில் இருக்கும் காவலர்களுக்கு தரமான உணவை வழங்க வேண்டியது சம்பந்தப்பட்டவர்களின் கடமை. இனியாவது இந்த விஷயத்தில் கூடுதல் அக்கறையுடன் செயல்படட்டும்