திருத்தணி மோட்டார் வாகன ஆய்வாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை: செல்போன்கள் பறிமுதல்


திருவள்ளூர்: திருத்தணி மோட்டார் வாகன ஆய்வாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் இன்று மேற்கொண்ட அதிரடி சோதனையில், பணப் பரிவர்த்தனைக்குப் பயன்படுத்திய இரண்டு மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே குன்னத்தூரில், சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில், திருவள்ளூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் கீழ் உள்ள திருத்தணி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்துக்கு வாகன ஓட்டுநர் உரிமம், வாகன உரிமம் வழங்குதல் மற்றும் புதுப்பித்தல் உள்ளிட்ட பணிகளுக்கு நாள் தோறும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில், இந்த அலுவலகத்தில் ஓட்டுநர் உரிமம் உள்ளிட்டவைக்கு லஞ்சம் வாங்கப்படுவதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாருக்கு புகார்கள் வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, திருத்தணி மோட்டார் வாகன அலுவலகத்தில் நேற்று மாலை 3.45 மணி முதல், நள்ளிரவு 11.45 மணி வரை லஞ்ச ஒழிப்புத்துறையின் திருவள்ளூர் டிஎஸ்பி-யான ராமச்சந்திர மூர்த்தி தலைமையிலான போலீஸார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

சோதனையில், கணக்கில் வராத ரூ.1,46,250 ரொக்கப் பணத்தை லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் பறிமுதல் செய்தனர். இதனை தொடர்ந்து, இன்று பகலில் பொன்னேரி அருகே மாதவரம் பகுதியில் உள்ள திருத்தணி மோட்டார் வாகன ஆய்வாளர் ராஜ ராஜேஸ்வரி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையின் திருவள்ளூர் இன்ஸ்பெக்டர்கள் தமிழரசி, மாலா உள்ளிட்டோர் தலைமையிலான போலீஸார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

சோதனையில், ராஜ ராஜேஸ்வரியின் இரு மொபைல் போன்களில் அதிகளவில் பணப் பரிவர்த்தனைகள் நடந்திருப்பது தெரியவந்தது. இதனையடுத்து, அவ்விரு போன்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட போன்களில் உள்ள பணப் பரிவர்த்தனைகள் குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும். அதில் முறைகேடு கண்டறியப்பட்டால், ராஜ ராஜேஸ்வரி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என லஞ்ச ஒழிப்புத்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

x