கர்நாடக முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முழங்கால் வலி தொடர்பான அறுவை சிகிச்சைக்காக மருத்துவர் ஆலோசனையின் பேரில், பன்னர்கட்டா சாலையில் உள்ள ஃபோர்டிஸ் மருத்துவமனையில் பசவராஜ் பொம்மை அனுமதிக்கப்பட்டுள்ளார். பசவராஜ் பொம்மை கடந்த சில வருடங்களாகவே கடுமையான முழங்கால் வலியால் அவதிப்பட்டு வந்தார்.
தினசரி நடவடிக்கைகளுக்காக நடந்து செல்வதும் அவருக்கு சிரமமாக இருந்தது. இருப்பினும், அவர் அரசியல் நடவடிக்கைகளில் தொடர்ந்து பங்கேற்று வந்தார். இதனிடையே, ஒரு கட்டத்தில் வலி தொடர்ந்து அதிகரிக்கவே, முதல்வர் பதவியில் இருக்கும்போதே அறுவை சிகிச்சைக்காக அவர் வெளிநாடு செல்லப் போவதாக செய்திகள் வெளியாகின.
ஆனால், தேர்தல் நெருங்கி வந்த வேளையில் அறுவை சிகிச்சை செய்தால் நீண்ட நாட்கள் ஓய்வெடுக்க வேண்டும் என்பதால் அந்த திட்டத்தை கைவிட்டார்.
இதையடுத்து முழங்கால் வலிக்காக ஆயுர்வேத சிகிச்சை பெற தொடங்கினார். அதோடு, மைசூரைச் சேர்ந்த பிரபல அறுவை சிகிச்சை மருத்துவர் லோகேஷ் டேக் என்பவரின் கண்காணிப்பிலும் இருந்தார். அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலிலும், தீவிர பரப்புரையில் ஈடுபட்டார். ஆனாலும், பாஜக கர்நாடகாவில் தோல்வியை தழுவியது.
இருப்பினும் தீவிர அரசியல் மற்றும் பல்வேறு பயணங்களில் தொடர்ந்து ஈடுபட்ட வந்தார். தமிழ்நாட்டிற்கு காவிரியில் இருந்து தண்ணீர் தரக்கூடாது என்பதை திட்டவட்டமாக வலியுறுத்தி வந்தார். இந்நிலையில், பசவராஜ பொம்மைக்கு, முழங்கால் வலி தொடர்ந்து அதிகரித்தது.
இதையடுத்து மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் அவருக்கு நீண்ட நாட்களுக்கு ஓய்வு தேவைப்படுவதால், அடுத்த சில மாதங்களுக்கு பசவராஜ் பொம்மை தீவிர அரசியலில் ஈடுபடமாட்டார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பாஜக தொண்டர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதுதொடர்பாக முன்னாள் முதல்வர் எடியூரப்பா வெளியிட்டுள்ள டவிட்டர் பதிவில், ”அறுவை சிகிச்சை செய்து கொள்ளவிருக்கும் எனது நெருங்கிய நண்பர் முன்னாள் முதலமைச்சர் திரு.பசவராஜ் பொம்மை விரைவில் பூரண குணமடைய வாழ்த்துகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.