பாஜகவில் சேர பள்ளித் தலைமை ஆசிரியர் பதவியை உதறியவருக்கு அதிர்ச்சி!


ஆசிரியர் சங்கர்

திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவர், தனது பணியை ராஜினாமா செய்து விட்டு பாஜகவில் இணைந்திருக்கிறார். அவருக்கு உடனடியாக பதவி வழங்கி பாஜக அதிர்ச்சி கொடுத்துள்ளது.

பாஜக

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி சைதாப்பேட்டையைச் சேர்ந்தவர் சங்கர் (55). இவர், தேவிகாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு அரசியல் ஆர்வம் இருந்து வந்த நிலையில் ஆசிரியர் பணியில் இருந்தவாறே கடந்த 5 ஆண்டுகளாக மறைமுகமாக, பாஜகவில் பணியாற்றி வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் தன் தலைமை ஆசிரியர் பணியை ராஜினாமா செய்து விட்டு, பாஜகவில் சங்கர் முறைப்படி இணைந்தார். ஆசிரியர் பணியை தூக்கி எறிந்துவிட்டு வந்த அவருக்கு பாஜகவில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

தற்போது இவர், மத்திய அரசின் நலத்திட்ட பிரிவு, திருவண்ணாமலை தெற்கு, வடக்கு மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட தலைவராக பணிபுரிந்து வருகிறார். ஜவுளி வியாபாரியான இவரது தந்தை வரதன், தீவிர திமுக விசுவாசியாவார். இவரது அண்ணன் சிவா, ஏற்கெனவே சுயேட்சை கவுன்சிலராக ஆரணி நகராட்சியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.

அண்ணாமலை

மற்றொரு அண்ணன் ரவி, தற்போது, ஆரணி நகராட்சி, 15வது வார்டு திமுக கவுன்சிலராக உள்ளார். இப்படி தீவிர திமுக விசுவாசம் உள்ள ஒரு குடும்பத்திலிருந்த ஒருவர், பாஜகவில் இணைந்து திமுகவுக்கு எதிராக, கட்சிப்பணியில் ஈடுபட்டு வருவது அக்கட்சி தொண்டர்களிடையே உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து சங்கர் கூறுகையில், ''ஊழலற்ற, தேசியப்பற்று கொண்ட, இந்துத்துவா கட்சியான, பாஜகவின் மீதான ஈர்ப்பால், தலைமை ஆசிரியர் பணியை ராஜினாமா செய்து கட்சிப்பணியை முழு நேரமாக செய்து வருகிறேன்.

மாநில தலைவர் அண்ணாமலை, ஐபிஎஸ் பதவியை ராஜினாமா செய்து பாஜக வளர்ச்சிக்கு பாடுபட்டு வருகிறார். அதை முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு, நானும் எனது பணியை ராஜினாமா செய்துவிட்டு கட்சி வளர்ச்சிப் பணியில் ஈடுபட்டுள்ளேன். தொடர்ந்து ஈடுபடுவேன்,'' என்றார்.

x