திமுக இளைஞரணி மாநாடு சேலத்தில் நாளை நடைபெற உள்ளது. இந்நிலையில் அதில் கலந்து கொள்ள தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சேலத்திற்கு இன்றே செல்கிறார்.
திமுக இளைஞரணி சார்பில் மாநில உரிமை மீட்பு மாநாடு சேலம் பெத்தநாயக்கன்பாளையத்தில் நாளை (ஜனவரி 21) நடைபெற உள்ளது. இதற்காக இன்று மாலையே நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதால் அதில் கலந்துகொள்ள தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஆகியோர் சேலம் இன்று பயணம் செய்ய உள்ளனர்.
மேலும் அங்கே ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பிரம்மாண்ட டிரோன் ஷோ, முரசொலி புத்தக சாலை மற்றும் கண்காட்சி அரங்கை இன்று மாலை முதல்வர் முக.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
இதனைத் தொடர்ந்து திமுக இளைஞரணி இரண்டாவது மாநில மாநாடு நாளை காலை 9 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி, மாநாடு பந்தல் அருகே அமைக்கப்பட்டுள்ள வீரபாண்டி ஆறுமுகம் பெயரிலான 100 அடி கொடிக்கம்பத்தில் திமுக கட்சிக் கொடியினை ஏற்றி வைத்து மாநாட்டை தொடக்கி வைக்க உள்ளார்.
இந்த மாநாட்டில் நீட் தேர்வை ரத்து செய்வதற்காக தமிழக முழுவதும் பெறப்பட்ட 85 லட்சம் கையெழுத்துக்களை அமைச்சர் உதயநிதி, முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் ஒப்படைக்க உள்ளார். மேலும் இந்த மாநாட்டில் மாநில உரிமைகளை மீட்பது தொடர்பாக முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றவும் வாய்ப்புள்ளது.
இதன்பின் மாலை 6.30 மணிக்கு, திமுக இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் மாநாட்டுக்கு தலைமையேற்று உரையை நிகழ்த்துகிறார். இரவு 7.30 மணிக்கு திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் நிறைவுரையாற்றுகிறார். இதில் கலந்து கொள்ள திமுக தொண்டர்கள் இன்று தங்கள் சொந்த ஊர்களில் இருந்து வாகனங்களில் சேலம் நோக்கி செல்லத் தொடங்கியுள்ளனர். இதனால் சேலம் மாவட்டமே திருவிழாக் கோலம் பூண்டுள்ளது.