"உதயநிதிக்கு பல்லு படாதது போல கேள்விகளைக் கேட்டிருக்கிறார்" என்று தொலைக்காட்சி நெறியாளரை ஆபாசமாக பேசிய பாஜக தமிழக தலைவர் அண்ணாமலைக்கு தமிழகம் முழுவதும் பத்திரிகையாளர் சங்கங்கள் கண்டனம் தெரிவித்துள்ளன. ஆனால், தான் கூறிய விமர்சனத்துக்கு எந்த காலத்திலும் மன்னிப்பு கேட்க முடியாது என்று பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனியார் சேனலுக்கு அண்மையில் பேட்டி அளித்திருந்தார். இந்த பேட்டி குறித்து அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் நேற்று கேள்வி எழுப்பினர்.
அதற்கு, " உதயநிதிக்கு பல்லு படாதது போல நெறியாளர் கேள்விகளைக் கேட்டிருக்கிறார்" என விமர்சித்தார். பாஜக தலைவர் அண்ணாமலையின் இந்த விமர்சனம் மோசமான இரட்டை அர்த்தத்தில் இருப்பதாக ஊடகவியலாளர்கள் குற்றம்சாட்டினர். மேலும், இதற்காக அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் பத்திரிகையாளர் சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.
இந்நிலையில், இதுதொடர்பான கேள்விக்கு பாஜக தலைவர் அண்ணாமலை, "அண்ணா.. எப்படி சொல்றதுனே எனக்கு தெரியலைங்கண்ணா. எங்க ஊரில் சாதாரணமாக மக்கள் பேசக்கூடிய மொழியில் நான் பேசியதை குற்றம் சுமத்துறாங்க. இவர்களுக்கு பிரச்சினை அண்ணாமலையின் பேச்சு அல்ல. அண்ணாமலை தான் அவர்களுக்கு பிரச்சினை. ஊர்களில் ஒரு மாடு பால் கறக்கணும்னா, அதன் காம்புகளுக்கு எண்ணெய் போட்டு நீவிவிட்டு, கன்றுகுட்டியைப் பக்குவமாக பல் படாமல் நீவிவிடணும். அதுக்கு அப்புறம் தான் பால் பீய்ச்சும்.
அப்போ அந்த அளவுக்கு உதயநிதி ஸ்டாலினுக்கு கோச்சிங் கொடுத்து, ஒரு கன்றுகுட்டி அதன் தாயின் காம்புகளை எப்படி பல் படாமல் நீவி விடுமோ, அந்த மாதிரி பக்குவமாக பாத்து உதயநிதியிடம் கேள்விகளைக் கேட்டு நெறியாளர் பேட்டி எடுத்திருக்கிறார். அதைதான் நான் சொன்னேன். இதில் என்ன தவறு இருக்கிறது?
அன்று மட்டுமல்ல. இனிமேலும் அந்த வழக்காடு மொழியை நான் பயன்படுத்தத்தான் போகிறேன். நான் பேசுவதை தவறாக புரிந்து கொள்பவர்களிடம், அவங்க தலையை நல்ல மனநல மருத்துவரிடம் போய் காட்ட சொல்லுங்கள்.
நான் என்ன பேசினாலும் அதில் வன்மத்தை கற்பிக்க ஒரு கும்பல் கிளம்பியிருக்கு. நீங்க அதே மாதிரி வன்மத்தோடு என்னைப் பாத்தீங்கனா, கஷ்டம் உங்களுக்கு தான். எனக்கு கிடையாது. என்னுடைய பேச்சில் பிரச்சினை இல்லை. பார்க்கிறவர்களின் கண்ணிலும், மனதிலும் தான் பிரச்சினை இருக்கிறது. யாருக்கும் பயந்து பேசக்கூடிய ஆள் நான் கிடையாது. யாரிடமும் மன்னிப்பும் கேட்க போவதில்லை" என திட்டவட்டமாக கூறியுள்ளார்.