மதுரை: ‘‘நான் பார்த்து நெகிழ்ந்து ரசித்த இளம் தலைவர்’’ என்று ராகுல் காந்தியின் வீடியோவை முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிவிட்டதால் அதிமுக வட்டாரத்தில் பரபரப்பையும், விவாதத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, மதுரை மாநகர அதிமுக செயலாளராக நீண்ட காலமாக இருந்து வருகிறார். ஜெயலலிதா அமைச்சரவையிலும், அவருக்கு பின் எடப்பாடி பழனிசாமி அமைச்சரவையிலும் அமைச்சராக இருந்தவர். ஜெயலலிதாவின் செல்லப்பிள்ளையாக செல்லூர் ராஜூ வலம் வந்தவர்.
அவரது மறைவுக்கு பிறகு, அதிமுகவில் செல்லூர் ராஜூவுக்கு பல்வேறு வகைகளில் நெருக்கடி ஏற்பட்டது. ஆனால், அதையெல்லாம் சமாளித்து, மாநகர அதிமுகவில் தற்போது வரை தவிர்க்க முடியாத சக்தியாக இருந்து வருகிறார். அவரது செயல்பாடுகள், பேச்சுகள் பொதுவெளியில் நகைச்சுவையாக இருந்தாலும், அனைத்து அரசியல் கட்சியினராலும் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது.
சமீபத்தில் கூட அதிமுகவில் உட்கட்சி பூசல் இருப்பதாகவும், சில முன்னாள் அமைச்சர்கள் அணி தாவப்போவதாகவும் தகவல் வெளியானது. செய்தியாளர்கள் சந்திப்பில் நிருபர்கள் அதைப்பற்றி கேள்வி எழுப்பியபோது, தனது அருகில் இருந்த மாநகர கட்சி நிர்வாகிகளை பார்த்து செல்லூர் ராஜூ, ‘ஏப்பா நாம எல்லோரும் ஒற்றுமையாகத்தானே இருக்கிறோம், நமக்குள்ள எங்கய்யா பிளவு இருக்கிறது’’ என்று கிண்டலாக அவரது பானியில் பதில் கூறினார்.
ஆனாலும், அடிக்கடி ஏதாவது பேசி செல்லூர் ராஜூ சர்ச்சையில் சிக்கி கொள்கிறார். ஆனால், அவர் எம்ஜிஆர் காலத்தில் இருந்தே கட்சியில் இருக்கும் தீவிர விசுவாசி என்பதால் அவரது சர்ச்சை பேச்சுகள், கடைசியில் ஒன்றுமில்லாமல் போய்விடுகிறது.
சமீபத்தில் எம்ஜிஆர் போல் சம்பாதித்த பணத்தை நடிகர் விஜய் ஏழைகளுக்கு செலவு செய்ய நினைப்பவர் என்று பேசினார். அவரது இந்த பேச்சு, அதிமுகவினர் மத்தியிலே விவாதப் பொருளானது. அந்த பரபரப்பு அடங்குவதற்குள், தற்போது செல்லூர் ராஜூ, அவரது எக்ஸ் தளத்தில் ‘‘நான் பார்த்து நெகிழ்ந்து ரசித்த இளம் தலைவர்’ என்று ராகுல் காந்தி, பொதுமக்களிடம் உரையாடும், செல்பி எடுக்கும் வீடியோ ஒன்றை பதிவிட்டு நெகிழ்ச்சியடைந்துள்ளார். அவரது இந்த பதிவு, தற்போது அவர் சார்ந்த அதிமுகவை தாண்டி, தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பையும், விவாதத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
நான் பார்த்து நெகிழ்ந்து ரசித்த இளம் தலைவர் !!! pic.twitter.com/3pGpxN9rDS
— Sellur K Raju (@SellurKRajuoffl) May 21, 2024
இதுகுறித்து செல்லூர் ராஜூவிடம் கேட்டபோது, ‘‘சாதாரணமாகத்தான் அந்த பதிவை போட்டேன். அதில் எந்த அரசியலும், உள்நோக்கமும் இல்லை. அரசியலில் சிறப்பாக செயல்படக்கூடியவர்களை பாராட்டுவதில் எந்த தவறும் இல்லை. பாராட்டனும் என்று தோன்றியது பாராட்டினேன். அவ்வளவுதான், ’’ என்றார்.