பனங்குடி சிபிசிஎல் நிறுவனத்தை முற்றுகையிட்டு மக்கள் போராட்டம்


நாகப்பட்டினம்: எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைக்கு நிலம் வழங்கிய தங்களுக்கு மீள் குடியமர்வு நிவாரணம் அறிவிக்காததைக் கண்டித்து பனக்குடியில் சிபிசிஎல் நிறுவனத்தை முற்றுகையிட்டு கிராம மக்கள் இன்று போராட்டம் நடத்தி வருவதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

நாகை மாவட்டம் பனங்குடியில் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான சிபிசிஎல் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை அமைந்துள்ளது. இந்த ஆலையை சுற்றி நான்கு ஊராட்சி மக்களிடமிருந்து சிபிசிஎல் ஆலைக்கு நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. இதற்காக பனங்குடி, நரிமணம், கோபுராஜபுரம் ஆகிய பகுதிகளுக்கு மறுவாழ்வு மற்றும் மீள் குடியமர்வு நிவாரணத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், உத்தமசோழபுரம் ஊராட்சியில் உள்ள பூதங்குடியில் நிலம் வழங்கிய மக்களுக்கும், விவசாயிகளுக்கும் மறுவாழ்வு மற்றும் மீள் குடியமர்வு நிவாரணத் தொகை அறிவிக்கவில்லை. இதனால் அவ்வூர் மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் இன்று சிபிசிஎல் நிறுவனம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் இந்த நிறுவனத்துக்கு மணல் ஏற்றி வந்த லாரிகள் தடுத்து நிறுத்தப்பட்டன.

இதையடுத்து அங்கு வந்த நாகை வட்டாச்சியர் ராஜா, பூதங்குடி கிராம மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது கிராம மக்கள் வட்டாச்சியரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. தொடர்ந்து, அங்கு வந்த நாகூர் போலீஸாரும், வருவாய் கோட்டாட்சியர் அரங்கநாதனும், மாவட்ட ஆட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தி இதற்கு தீர்வு எட்டப்படும் என உறுதி அளித்தனர். இதை ஏற்றுக்கொண்ட மக்கள், தற்காலிகமாக தங்களது போராட்டத்தை விலக்கிக் கொண்டனர்.

இதுபற்றி நம்மிடம் பேசிய பூதங்குடி கிராம மக்கள், ''எங்கள் கிராமத்தில் சிபிசிஎல் ஆலையைத் தொடங்கும் போது 150 விவசாயிகளிடம் இருந்து 300 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. அப்போது அளித்த உத்தரவாதத்தின் படி ஆலையில் ஒருவருக்குக்கூட இதுவரை வேலைவாய்ப்பு வழங்கவில்லை'' என குற்றம் சாட்டினர்.

தொடர்ந்து பேசிய அவர்கள், ''மற்ற ஊராட்சியில் உள்ள மக்களுக்கு மீள் குடியமர்வு நிவாரணம் வழங்கியதுபோல், எங்களுக்கும் வழங்க வேண்டும். அதிகாரிகள் உறுதியளித்தபடி எங்களுக்கு நிவாரணம் வழங்கப்படவில்லை என்றால், சிபிசிஎல் எண்ணெய் ஆலை பணிகளை தடுத்து நிறுத்தி, ரேஷன் கார்டுகளை அரசிடம் ஒப்படைத்து தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம்'' எனவும் அவர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.

x