ராணிப்பேட்டை மாவட்டத்தில் தொடர் கனமழையால் 1,200 ஏக்கர் நெற்பயிர்கள் சேதம்


ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இரவில் பெய்து வரும் கனமழை காரணமாக 1,200 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. இதனை கணக்கீடு செய்யும் பணி தொடங்கி உள்ளதாக வேளாண் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இரவில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக நெமிலி, கலவை, அரக்கோணம், காவேரிப்பாக்கம், திமிரி உட்பட பல்வேறு இடங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த சொர்ணவாரி பருவ நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. இதனால், விவசாயிகள் மிகுந்த வேதனையடைந்துள்ளனர்.

மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை வேளாண்மை துறை அதிகாரிகள் விரைந்து கணக்கீடு செய்து, அதற்கான இழப்பீடு தொகையினை விவசாயிகளுக்கு வழங்க வேண்டுமென விவசாயிகள் மத்தியிலான கோரிக்கை நாளுக்கு நாள் வலுப்பெற்று வருகிறது. இதனைத்தொடர்ந்து, மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின்படி வேளாண்மை துறையினர் நெற்பயிர் சேதம் குறித்து கணக்கீடும் பணிகளை தொடங்கியுள்ளனர்.

மாவட்டத்தில் மொத்தம் 1,200 ஏக்கர் சொர்ணவாரி பருவத்தில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. கலவை, திமிரி மற்றும் அரக்கோணம் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகளவில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதனை கணக்கீடு செய்வதற்காக வருவாய் மற்றும் வேளாண்மை துறை அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் நேற்று முன்தினம் முதல் கணக்கீடு பணிகளை தொடங்கியுள்ளனர்.

பணிகள் அடுத்த சில நாட்களில் முடிவடையும். இதில், ஒவ்வொரு விவசாயிகளின் ஆவணங்கள் மற்றும் நிலத்தில் பயிர் சேதமடைந்த பகுதிகளின் நிலை குறித்தும் கணக்கீடு செய்து மொத்தமாக மாவட்ட நிர்வாகத்துக்கு அறிக்கை வழங்கப்படும். கணக்கீடு முடிந்து அனைத்து அறிக்கையும் மாவட்ட நிர்வாகத்தின் மூலமாக இழப்பீடு பெற அரசுக்கு அனுப்பி வைக்கப்படும். அரசு மூலமாக இழப்பீட்டு தொகை வந்தவுடன் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வழங்கப்படும் என வேளாண்மை துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

x