தமிழக தென் மாவட்டங்களில் பரவலாக பெய்த மழையால் தணிந்தது வெப்பம்!


தென்காசி/ திருநெல்வேலி/ நாகர்கோவில்: திருநெல்வேலி உட்பட தென் மாவட்டங் களில் பரவலாக நேற்று மழை பெய்தது. தென் மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக தென்மேற்கு பருவமழை பெய்யாததால், வெப்பத்தின் தாக்கம் 102 டிகிரி வரை அதிகரித்தது. இந்நிலையில், வளிமண்டல காற்று சுழற்சி காரணமாக கடந்த 2 நாட்களாக மாலை, இரவு நேரங்களில் சில இடங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்து வருகிறது.

தென்காசி மாவட்டத்தில் நேற்று காலை வரை 24 மணி நேரத்தில் அடவிநயினார் அணையில் 38 மி.மீ. மழை பதிவானது. செங்கோட்டையில் 36 மி.மீ., ஆய்க்குடியில் 22 மி.மீ., கருப்பாநதி அணையில் 4.50 மி.மீ., தென்காசியில் 2.30 மி.மீ., குண்டாறு அணையில் 2 மி.மீ. மழை பதிவானது. நேற்றும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. மதியத்துக்கு மேல் பொட்டல்புதூர், கடையம் உள்ளிட்ட பகுதிகளில் இடி, மின்னலுடன் மழை பெய்தது.

குண்டாறு அணை நீர்மட்டம் தொடர்ந்து முழு கொள்ளளவில் உள்ளது. கடனாநதி அணை நீர்மட்டம் 72.20 அடியாகவும், ராமநதி அணை நீர்மட்டம் 76.25 அடியாகவும், கருப்பாநதி அணை நீர்மட்டம் 52.17 அடியாகவும், அடவிநயினார் அணை நீர்மட்டம் 114.75 அடியாகவும் இருந்தது. குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் மிதமான அளவில் தண்ணீர் விழுந்தது. அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியுடன் குளித்துச் சென்றனர்.

பாளையங்கோட்டை: பாளையங்கோட்டை உள்ளிட்ட திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று மாலை பலத்த மழை பெய்தது. மாலை 4 மணிநிலவரப்படி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பெய்த மழையளவு (மி.மீட்டரில்):

அம்பாசமுத்திரம்- 6, சேரன்மகாதேவி- 25, மணிமுத்தாறு- 8.40, நாங்குநேரி- 6, பாளையங்கோட்டை- 10, பாபநாசம்- 8, ராதாபுரம்- 8, திருநெல்வேலி- 6.40.

பாளையங்கோட்டையில் பரவலாக பெய்த பலத்த மழையால் தாழ்வான பகுதிகளிலும், சாலையோரங்களிலும் குளம்போல் தண்ணீர் தேங்கியது. பாளையங்கோட்டை பேருந்து நிலையத்தை சுற்றிலுள்ள தாழ்வான சாலைகளில் வாகனங்கள் தத்தளித்து செல்லும் அளவுக்கு தண்ணீர் பெருக் கெடுத்தது.

கன்னியாகுமரி: குமரி மாவட்டத்தில் அதிகபட்சமாக திற்பரப்பில் 59 மிமீ., மழை பதிவானது. நேற்று முன்தினம் இரவில் இருந்து மாவட்டத்தில் விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருகிறது. நேற்று காலை 8 மணி வரை, அடையாமடையில் 38 மிமீ., பெருஞ்சாணியில் 26, புத்தன்அணையில் 24, சிவலோகத்தில் 22, குழித்துறையில் 17 மிமீ மழை பதிவானது.

பேச்சிப்பாறை அணைக்கு 519 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையின் நீர்மட்டம் 43.88 அடி தண்ணீர் உள்ள நிலையில், அணையில் இருந்து 475 கனஅடி தண்ணீர் வெளியேறி வருகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 69.15 அடியாக உள்ள நிலையில், அணைக்கு 244 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 560 கனஅடி தண்ணீர் வெளியேறி வருகிறது.

x