சிவகாசி: தீபாவளி, ஓணம் உள்ளிட்ட பண்டிகைகளின்போது பட்டாசு வெடிக்க,சுற்றுச்சூழல் விதிகளில் இருந்து விலக்கு அளிப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்று மத்திய பெட்ரொலியத் துறை இணையமைச்சர் சுரேஷ்கோபி கூறினார்.
பட்டாசு பாதுகாப்பு தொடர்பாக,உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கப் பிரதிநிதிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் சிவகாசியில் நேற்று நடைபெற்றது. இதில் மத்திய இணையமைச்சர் சுரேஷ் கோபி பங்கேற்றார்.
பட்டாசு உற்பத்தியில் பேரியம் நைட்ரேட் பயன்பாடு மற்றும் சரவெடி தயாரிக்க அனுமதிக்க வேண்டும். இடி, மின்னல் காரணமாக பட்டாசு ஆலைகளில் விபத்துநேரிடும்போது, ஆலையின் உரிமத்தை ரத்து செய்யக்கூடாது. உரிமம் புதுப்பிக்க விண்ணப்பிக்கும்போது, காலதாமதம் இல்லாமல் அனுமதி வழங்க வேண்டும். தீபாவளிப் பண்டிகைக்கு பட்டாசு வெடிக்க, சுற்றுச்சூழல் விதியில் சிறப்பு விலக்கு அளிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை பட்டாசுஉற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் வலியுறுத்தினர்.
மத்திய இணையமைச்சர் பேசும்போது, “உச்ச நீதிமன்ற உத்தரவுபடியே பட்டாசு உற்பத்தி நடைபெற வேண்டும். தற்காலிகமாக உரிமம் ரத்து செய்யப்பட்ட பட்டாசு ஆலைகளுக்கு, உடனடியாக ஆய்வு மேற்கொண்டு, மீண்டும் உரிமம் வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும்.
இடி தாக்காமல் இருக்க பட்டாசு ஆலைகளில் மகிழம்பூ மரங்களை வளர்க்கலாம். தீபாவளி, ஓணம் உள்ளிட்ட பண்டிகைகளை சிறப்புநிகழ்ச்சியாக அறிவித்து பட்டாசுகளை வெடிக்க, சுற்றுச்சூழல் விதிகளில் இருந்து விலக்கு அளிப்பது குறித்து பரிசீலிக்கப்படும். பட்டாசு கடைகளுக்கு காலதாமதமின்றி உரிமம் வழங்குவது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும்”என்றார்.
கூட்டத்தில், பெசொ கட்டுப்பாட்டு அலுவலர் ஸ்ரீகுமார், தொழில் துறை இணைச் செயலர்புவனேஷ்பிரதாப் சிங் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பின்னர் மத்திய இணையமைச்சர் சுரேஷ் கோபி செய்தியாளர்களிடம் கூறும்போது, “ தென்னிந்திய மாநிலங்களின் காலச்சாரத் திருவிழாக்களின்போது, பட்டாசு திருவிழாவையும் நடத்த தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்வேன்” என்றார்