இந்தியாவின் கல்வி ஆற்றல் மையமாக மின்னும் தமிழகம்: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்


சென்னை: இந்தியாவின் கல்வி ஆற்றல் மையமாகத் தமிழகம் தொடர்ந்து மின்னுவதாக தேசிய அளவில் கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசை பட்டியலை (என்ஐஆர்எஃப் )சுட்டிக்காட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

தேசிய அளவில் சிறந்த பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்களின் தரவரிசைப் பட்டியலை ஒட்டுமொத்த கல்வி நிறுவனங்கள் என்ற அளவிலும், 16வகையான பாடப்பிரிவுகள் என்றஅளவிலும் மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டு வருகிறது. அந்தவகையில் இந்த 2024-ம் ஆண்டுக்கான பட்டியல் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது.

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், கல்வி நிறுவன பொறுப்பாளர்களுக்கு விருதுகளை வழங்கினார். இதில், ஒட்டுமொத்த கல்வி நிறுவனங்களில் தேசிய அளவில் சென்னை ஐஐடி முதலிடம் பிடித்தது. ஆராய்ச்சி மற்றும் புதுமைகள் பிரிவில் 2-ம் இடத்தை சென்னை ஐஐடி பிடித்தது. திருச்சி என்ஐடி பொறியியல் பிரிவில் 9-ம் இடத்தைப் பிடித்தது. மாநில பல்கலைக்கழகங்கள் பிரிவில் சென்னை அண்ணா பல்கலைக்கழகம் முதலிடத்தையும், 8-வது இடத்தை கோவை பாரதியார் பல்கலைக்கழகமும் பிடித்தது.

இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது: இந்தியாவின் கல்வி ஆற்றல் மையமாகதமிழகம்தொடர்ந்து மின்னுகிறது. என்ஐஆர்எஃப் தரவரிசைப்பட்டியலில் அதிக எண்ணிக்கையிலான உயர்கல்வி நிறுவனங்களுடன் நமது மாநிலம் மற்றவர்களை விட மிகவும் முன்னோக்கி நிற்பதுடன், தரமான கல்விக்கான அளவுகோலை நிர்ணயித்துள்ளது.

நமது நாட்டின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் முன்னணியில் இருக்கும் திராவிட மாடலுக்கு இது ஒரு பெருமையான தருணம். நான் முதல்வன், புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் போன்ற முத்தான திட்டங்கள் மூலம் நமது மாணவர்கள் உயர்கல்வியில் மென்மேலும் புதிய உச்சங்களை தொடுவார்கள். இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்

x