பிரதமர் வீடு கட்டும் திட்டத்துக்கான நிதி ரூ.5 லட்சமாக உயர்வு: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு


புதுச்சேரி: காமராஜர் கல்வீடு கட்டும் திட்டம் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் நிதி ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும். அதே போல பிரதமர் கல்வீடு கட்டும் திட்டத்திலும் மத்திய அரசு உயர்த்திக் கொடுத்திருக்கின்ற ரூ.2.25 லட்சம், அதில் நம்முடைய நிதியையும் சேர்த்து அதையும் ரூ.5 லட்சமாக கொடுக்கப்படும் என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

புதுச்சேரி சட்டப்பேரவையில் இன்று மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் முதல்வர் ரங்கசாமி பதிலளித்து பேசியதாவது: “2024-25-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை – மானியக் கோரிக்கைகள் மீது அனைத்து எம்எல்ஏக்களும் மாநிலத்தின் வளர்ச்சி, மக்கள் வளர்ச்சிக்காக தங்களுடைய கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.

அமைச்சர்கள் அவர்களுடைய மானியக் கோரிக்கைகள் மீது நிறைய தெளிவான பதிலை சொல்லியிருக்கிறார்கள். அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றித் தரவேண்டும் என்பதுதான் அரசின் எண்ணம்.

பட்டியலின மக்களுக்கான சிறப்புக்கூறு நிதி முழுவதுமாக பயன்படுத்த வேண்டும் என்பதே அரசினுடைய எண்ணம். இதற்காக உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் அமைச்சர் அதிக கவனம் செலுத்தி நிதியை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்வார் என்ற நம்பிக்கை இருக்கின்றது.

குடிசை மாற்று வாரியத்தின் மூலம் பெருந்தலைவர் காமராஜர் கல்வீடு கட்டும் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வந்தது. இடையில் தடைபட்டிருந்தாலும் மீண்டும் அந்த திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த வேண்டும் என்பது அரசின் எண்ணம். கல்வீடு கட்டும் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் நிதி ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்.

அதேபோன்று பிரதமர் கல்வீடு கட்டும் திட்டத்திலும் மத்திய அரசு உயர்த்திக் கொடுத்திருக்கின்ற ரூ.2.25 லட்சம், அதில் நம்முடைய நிதியையும் சேர்த்து அதையும் ரூ.5 லட்சமாக கொடுக்கப்படும்.

மத்திய அரசு அளிக்கும் நிதியையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும், மாநில அரசின் நிதியின் மூலமாகவும் கல்வீடு கட்டும் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த வேண்டும் என்பது அரசின் எண்ணம்.

புதிய சட்டப்பேரவை கட்ட வேண்டும் என்ற எண்ணத்தை அனைத்து எம்எல்ஏக்களும் வெளிப்படுத்தியிருக்கின்றார்கள். சட்டப்பேரவை பழமையான கட்டிடமாக இருப்பதால் புதிய சட்டப்பேரவை கட்டப்பட வேண்டியது அவசியமானது. நிதி ஒரு பிரச்சனை இல்லை என்பது எனது எண்ணம். மத்திய அரசிடம் நிதி கேட்டிருக்கிறோம்.

சட்டப்பேரவை கட்டுவது என்று முடிவெடுத்துவிட்டால் நிச்சயமாக கட்டியாக வேண்டும். அதற்கான நிதியை ஒதுக்கி கட்டிவிடலாம். ஆனால் எந்த இடத்தில் கட்டுவது என்பதில் முடிவு கிடைக்காமல் இருந்து கொண்டிருக்கிறது. எவ்வாறு கட்டுவது என்பதில் வெவ்வேறு நிலைகளில் கருத்துகள் இருந்து கொண்டிருக்கின்றன. இருப்பினும் சட்டப்பேரவைக்கான அடிக்கல் நாட்டி கட்டிடம் கட்டும் பணி தொடங்கப்படும்.

பத்திரிகையாளர்களுக்கு விடுபட்டவர்களுக்கு வீட்டு மனைப்பட்டா வழங்குவதற்கான இடம் தேர்வு செய்து வீட்டு மனை கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். பத்திரிகையாளர்களுக்கு லேப்டாப் வழங்குவதை அரசு கருத்தில் எடுத்துக் கொண்டு அவர்களுக்கு வழங்கப்படும். பத்திரிகையாளர்களுக்கான மாத ஓய்வூதியம் ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.15,000 ஆக உயர்த்தி வழங்கப்படும்.

புதுச்சேரிக்காக இ-பேருந்து வாங்க உள்ளோம். காரைக்காலிலும் கேட்டிருக்கிறார்கள். தமிழகம், கர்நாடகா, ஆந்திரா ஆகிய வழித்தடங்களில் பெர்மிட் வாங்கி இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். நிறைய பேருந்துகள் விடுவதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறோம். அதுபோல் காரைக்காலிலும் நிறைய பேருந்துகள் விட உள்ளோம்.

பாண்லே நிறுவனத்தில் ஐஸ்கிரீம் பிளான்ட் அமைக்க உள்ளோம். பால் மட்டுமின்றி ஐஸ்கிரீம் வகைகளை தயாரிக்கும் வகையில் ரூ.30 கோடி செலவில் ஐஸ்கிரீம் பிளான்ட் அமைக்கும் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

கூட்டுறவு சர்க்கரை ஆலையைத் திறந்து எத்தனால் தயாரிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதேபோல் கூட்டுறவு நூற்பாலையையும் தனியார் பங்களிப்புடன் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நலிந்த நிலையில் இருந்த அமுதசுரபி, கான்பெட் ஆகிய நிறுவனங்கள் மீண்டும் புத்துயிர் பெற்று நடந்து கொண்டிருக்கிறது. அங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு ஊதியம் போடப்பட்டு வருகின்றது.

நலிந்த கூட்டுறவு சங்கங்கள் எல்லாம் வளம் பெற வேண்டும் என்பது அரசின் எண்ணம். அதில் அரசு கவனம் செலுத்தி வருகிறது. அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை விரைந்து நிரப்ப அரசு மிகுந்த கவனம் செய்து வருகிறது. அறிவித்த எந்த திட்டங்களையும் அரசு விட்டுவிடாது. சில காரணங்களால் தாமதம் ஏற்பட்டாலும் அறிவித்த அனைத்து திட்டங்களையும் அரசு செயல்படுத்தும்.

பொதுப்பணித்துறை தினக்கூலி ஊழியர்களுக்கு மாதம் ரூ.18,000 உயர்த்தப்பட்டு செப்டம்பர் மாதம் முதல் வழங்கப்படும். பொதுப்பணித்துறை, சுகாதாரத்துறை உள்ளிட்ட ஏனையத் துறைகளைச் சேர்ந்த பணியின்போது உயிரிழந்த ஊழியர்களின் வாரிசுதாரர்களுக்கு ஒரு முறை தளர்வு முறையில் கருணை அடிப்படையில் பல்நோக்கு ஊழியர்களாக (எம்டிஎஸ்) பணி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

கடந்த காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் பணியமர்த்தப்பட்டு நீக்கம் செய்யப்பட்ட பொதுப்பணித்துறை மற்றும் காமராஜர் வேளாண் அறிவியல் நிலைய (கேவிகே) ஊழியர்களை எப்படி பணியமர்த்தலாம் என்பதை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும்.

பாப்ஸ்கோ நிறுவனத்தில் வேலை செய்த நாட்களுக்குரிய ஊதியத்தை மட்டும் வழங்க முடிவு செய்யப்பட்டு அதற்கான கோப்பு தயாரிக்கப்பட்டிருக்கிறது. விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்களில் கடன் பெற்ற விவசாயிகளுக்கு ரூ.13.36 கோடி கடன் தள்ளுபடி செய்ய அமைச்சரவை ஒப்புதலுக்கு வைக்கப்பட்டுள்ளது.

பெரிய மார்க்கெட் ஒவ்வொரு பகுதியாக கட்டப்படும். முதலில் மேற்குப் பகுதியிலிருந்து கட்ட சொல்லியிருக்கிறேன். நெல்லுக்கான ஊக்கத்தொகை கிலோவுக்கு ரூ.2 அதிகரிக்கப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களில் எப்படி கொடுக்கப்படுகிறது என்பதை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும். கால்நடை விவசாயிகளுக்கு 75 விழுக்காடு மானியத்தில் மாட்டுத் தீவனம் நான்கு மாதங்களுக்கு மட்டும் வழங்கப்பட்டு வந்தது. தற்போது அது ஆண்டு முழுவதும் வழங்கப்படும்” இவ்வாறு முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்.

x