மோடி Vs கார்கே, ஸ்டாலின் முதல் செல்லூர் ராஜு சலசலப்பு வரை | டாப் 10 விரைவுச் செய்திகள்


மோடி Vs கார்கே @ மக்களவைத் தேர்தல் பிரச்சாரம்: பிஹார் மாநிலம் கிழக்கு சம்பாரனில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, “காங்கிரஸும் அதன் கூட்டணிக் கட்சிகளும் சேர்ந்து 60 ஆண்டு காலமாக நாட்டை நாசப்படுத்தி விட்டதாகவும், மூன்று - நான்கு தலைமுறைகளின் வாழ்க்கையை அழித்துவிட்டதாகவும் குற்றம்சாட்டினார்.

மேலும், “ஜூன் 4 ஆம் தேதி, இண்டியா கூட்டணி மிகப் பெரிய தாக்குதலை சந்திக்கும். நாட்டில் நடக்கும் ஊழல்கள், திருப்திப்படுத்தும் அரசியல், சனாதன தர்மத்தை எதிர்க்கும் சிதைந்த மனநிலை, குற்றவாளிகள், மாஃபியாக்கள் ஆகியவற்றுக்கு எதிரான தாக்குதலாக அது இருக்கும்” என்று அவர் கூறினார்.

இதனிடையே, சண்டிகரில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, “பிரதமர் நரேந்திர மோடி தனது அரசின் 10 ஆண்டு காலப் பணி குறித்துப் பேசாமல், நாள் முழுவதும் காங்கிரஸை வசைபாடிக்கொண்டே இருக்கிறார். 53 ஆண்டுகளில் நான் பல பிரதமர்களை பார்த்திருக்கிறேன். ஆனால், நரேந்திர மோடி போல் யாரும் பேசியதில்லை. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி மக்களின் நகை, நிலம், எருமை மாடுகளை காங்கிரஸ் பறித்துவிடும் என்று நரேந்திர மோடி பொய்களைப் பரப்புகிறார். எவ்வளவு காலம்தான் இப்படிச் சொல்லி மக்களைத் தவறாக வழிநடத்துவீர்கள் என அவரை கேட்க விரும்புகிறேன்” என்று சரமாரியாக சாடினார்.

“தமிழர்கள் மீது மோடிக்கு இத்தனை காழ்ப்பும் வெறுப்பும் ஏன்?” - ஸ்டாலின்: “ஒடிசா மாநிலத்தில் தேர்தல் பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, புகழ்பெற்ற ஜெகந்நாதர் ஆலயத்தின் பொக்கிஷ அறையின் தொலைந்துபோன சாவிகள் தமிழகத்தில் இருப்பதாகப் பேசி இருக்கிறார். இது, கோடிக்கணக்கான மக்களால் வணங்கப்படும் புரி ஜெகந்நாதரை அவமதிப்பதோடு, ஒடிசா மாநிலத்தோடு நல்லுறவும் நேசமும் கொண்ட தமிழக மக்களை அவமதிப்பதும் புண்படுத்துவதுமாகும்.

ஜெகந்நாதர் மீது அளவற்ற பக்தி கொண்ட ஒடிசா மக்களைத் தமிழக மக்களுக்கு எதிராகத் தூண்டும் பேச்சல்லவா இது?. ஆலயத்தின் பொக்கிஷத்தைக் களவாடும் திருடர்கள் என்ற பழியைத் தமிழக மக்கள் மீது பிரதமர் மோடி சுமத்தலாமா? தமிழக மக்களை நேர்மையற்றவர்கள் என்று கூறுவது, தமிழகத்தை அவமதிப்பது அல்லவா? தமிழர்கள் மீது மோடிக்கு இத்தனை காழ்ப்பும் வெறுப்பும் ஏன்?

தமிழகத்துக்கு வரும்போது தமிழ்மொழியை உயர்வாகப் போற்றுவதாகப் பேசுவதும், தமிழர்களைப் போன்ற அறிவாளிகள் இல்லை என்று பாராட்டுவதும், அதேநேரத்தில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், ஒடிசா போன்ற மாநிலங்களில் வாக்கு சேகரிக்கும்போது தமிழக மக்களைத் திருடர்களைப் போலவும், வெறுப்பு மிகுந்தவர்களாகவும் அந்த மாநிலங்களுக்கு எதிரானவர்களாகவும் பேசுவது இரட்டை வேடம். இதை மக்கள் புரிந்து கொள்வார்கள். வாக்குக்காகத் தமிழ்நாட்டையும் தமிழர்களையும் அவதூறு செய்வதைப் பிரதமர் நிறுத்திக் கொள்ள வேண்டும்” என்று முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதன் தொடர்ச்சியாக, முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில், “தமிழ்நாட்டில் தேர்தல் முடிந்ததும், தனது 'தமிழ்ப் பற்றாளர்' வேடத்தைக் கலைத்துவிட்டார் பிரதமர் மோடி! ஒடிசாவில் உள்ள புரி ஜெகந்நாதர் கோயிலின் சொத்துகளைக் களவாடும் திருடர்கள் போலத் தமிழர்கள் மீது பொய்ப்பழி சுமத்தியிருக்கிறார். வடக்கில் தமிழர்களைக் காழ்ப்புணர்வுடன் தூற்றுவதும், மாநிலங்களுக்கிடையே குரோதத்தைத் தூண்டுவதும் ஒரு பிரதமருக்கு அழகா? வாக்குகளுக்காக, தான் வகிக்கும் பொறுப்பின் கண்ணியத்தை மறந்து, நாளுக்கு நாள் இவ்வளவு தரக்குறைவாக நடந்துகொள்வதை பிரதமர் நிறுத்திக்கொள்ள வேண்டும்!" என்று பதிவிட்டுள்ளார்.

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை: தீர்ப்பாயம் விசாரணை: கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம், தேவிகுளம் அருகே உள்ள பெருகுடா பகுதியில், சிலந்தி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டுவதாக தகவல்கள் வெளியான நிலையில், அதுகுறித்து தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது.

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதற்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், தேசிய வன விலங்குகள் வாரியத்திடம் கேரள அரசு உரிய அனுமதி பெற்றுள்ளதா? என கேள்வி எழுப்பியதோடு, உரிய அனுமதி பெறாவிட்டால் தடுப்பணை கட்டும் பணியை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டது. மேலும், இந்த தடுப்பணை கட்டுவதால் தமிழகத்துக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை 24-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

தமிழகத்தில் இரு தினங்களுக்கு கனமழை வாய்ப்பு: தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் புதன்கிழமை ஒரு புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும். இது வடகிழக்கு திசையில் நகர்ந்து 24-ம் தேதி வாக்கில், மத்திய வங்கக் கடல் பகுதிகளில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும். இதன் காரணமாக, 22 மற்றும் 23-ஆம் தேதிகளில், மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள், மதுரை, விருதுநகர் மற்றும் தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும், தேனி முதல் கன்னியாகுமரி வரையிலான மேற்குத் தொடர்ச்சி மலையின் தென் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனர் பா.செந்தாமரை கண்ணன் கூறியுள்ளார்.

எண்ணூர் உர ஆலை வாயு கசிவு வழக்கு: முக்கிய தீர்ப்பு: சென்னை எண்ணூரில் அமோனியா வாயு கசிந்து பாதிப்பு ஏற்பட்டது தொடர்பான வழக்கில் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், மத்திய தொழிலக பாதுகாப்புத் துறை, இந்திய கடல்சார் வாரியம் ஆகியவற்றின் தடையில்லா சான்று பெற்ற பிறகே உர ஆலையைத் திறக்க வேண்டும் என்று தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தது.

முன்னதாக, சென்னை எண்ணூர் பெரியக்குப்பம் பகுதியில் தனியார் உரத் தொழிற்சாலை அமைந்துள்ளது. கடந்த டிசம்பர் மாதம் நள்ளிரவு இந்த தொழிற்சாலைக்கு திரவ அமோனியா கொண்டு செல்லும் குழாயில் கசிவு ஏற்பட்டது. இதன் காரணமாக, இந்த தொழிற்சாலைக்கு அருகே உள்ள பெரியக்குப்பம், சின்னக்குப்பம், நேதாஜி நகர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கு வாந்தி, கண் எரிச்சல், மூச்சுத்திணறல் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

வாய்ப்பு கிடைத்தால் மகிழ்ச்சி - ஹர்பஜன் சிங் விருப்பம்: “நான் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பம் செய்வேனா என்று கேட்டால் தெரியவில்லை. இந்திய அணியின் பயிற்சியாளர் பதவி என்பது வீரர்களுக்கு ட்ரைவ் ஆட சொல்லித் தருவதோ, புல் ஷாட் ஆட சொல்லித்தருவதோ கிடையாது. இதெல்லாம் அவர்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கும். பயிற்சியாளர் பதவி என்பது மேலாண்மை திறன் பற்றியது. கிரிக்கெட் எனக்கு நிறையக் கொடுத்திருக்கிறது. அதற்கு திருப்பித் தர வாய்ப்பு கிடைத்தால், நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன்” என்று இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் விருப்பம் தெரிவித்துள்ளார்.

பாஜக மாநில பொருளாளரிடம் சிபிசிஐடி விசாரணை: சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பணம் கைப்பற்றப்பட்ட வழக்கு தொடர்பாக, பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகரிடம் சிபிசிஐடி போலீஸார் கோவையில் விசாரணை மேற்கொண்டனர். இதன்பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.ஆர்.சேகர், போலீஸாரின் விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைத்தேன். அவர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்தேன். திமுக அரசு பாஜகவை களங்கப்படுத்தவும், அவமானப்படுத்தவும் தொடர்பு இல்லாத விவகாரத்தில் பாஜக அமைப்பு செயலாளரிடமும், பொருளாளர் ஆகிய என்னிடமும் விசாரிக்க வேண்டும் என போலீஸாரை தூண்டுகின்றனர். இது கண்டிக்கத்தக்கது, என்று கூறினார்.

பாஜக வேட்பாளர் அபிஜித்துக்கு 24 மணி நேரம் தடை: மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜியை இழிவுபடுத்தும் வகையில் கருத்து தெரிவித்த பாஜக வேட்பாளரும், கொல்கத்தா உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதியுமான அபிஜித் கங்கோபாத்யாய் 24 மணி நேரம் பிரச்சாரம் செய்ய இந்திய தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

கடந்த 15-ம் தேதி மேற்கு வங்கத்தின் ஹால்டியாவில் நடந்த பொதுக்கூட்டத்தில் வங்க மொழியில் பேசிய அபிஜித் கங்கோபாத்யாய், "மம்தா பானர்ஜி, நீங்கள் உங்களை எவ்வளவு விலைக்கு விற்கிறீர்கள்? உங்கள் கட்டணம் ரூ.10 லட்சம், ஏன்? உங்கள் மேக்கப்புக்கு அதிக செலவு ஆவதாலா? மம்தா பானர்ஜி ஒரு பெண்தானா என நான் சில நேரங்களில் ஆச்சரியப்படுகிறேன்" என கூறி இருந்தார்.

ரெய்சி மறைவை அடுத்து ஈரானில் ஜூன் 28-ல் அதிபர் தேர்தல்: ஈரான் அதிபர் இப்ராஹிம் ரெய்சியின் மறைவை அடுத்து, அந்நாட்டின் புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் ஜூன் 28-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்ராஹிம் ரெய்சி ஞாயிறன்று ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். இதையடுத்து, 50 நாட்களுக்கு தற்காலிக அதிபராக அந்நாட்டின் முதல் துணை அதிபர் முகமது மொக்பரை, அந்நாட்டின் தேசிய தலைவர் சையத் அலி காமேனி நியமித்தார்.

ராகுல் காந்திக்கு செல்லூர் ராஜு திடீர் புகழாரம்: அதிமுக மூத்த தலைவர் செல்லூர் ராஜு, தனது எக்ஸ் பக்கத்தில் ராகுல் காந்தியின் பிரச்சாரத்தின்போது மக்களுடன் எளிமையாக பழகும் வீடியோவை பகிர்ந்து, அதற்கு மேற்கோளாக "நான் பார்த்து நெகிழ்ந்து ரசித்த இளம் தலைவர்" என்று பதிவிட்டுள்ளார். செல்லூர் ராஜு திடீரென ராகுல் காந்திக்கு புகழாரம் சூட்டியுள்ளது புரியாத புதிராக உள்ளது. அதிமுக தலைமை இண்டியா கூட்டணியை கடுமையாக விமர்சித்து வருகிற நிலையில், செல்லூர் ராஜு திடீரென ராகுல் காந்தியை பாராட்டியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

x