அமைச்சர் ராஜினாமாவா... நீக்கமா? சங்கடத்தில் சந்திரகாசு மகள்!


சந்திர பிரியங்கா

புதுச்சேரி யூனியன் பிரதேசமான காரைக்காலைச் சேர்ந்த, என்.ஆர்.காங்கிரஸ் அமைச்சராக இருந்த சந்திரகாசு முதல்வர் ரங்கசாமியின் நெருங்கிய நண்பர். சந்திரகாசு மறைவுக்குப் பிறகு அவரது மகளான சந்திர பிரியங்காவுக்கு தேர்தலில் போட்டியிட ரங்கசாமி வாய்ப்பு தந்தார்.

2021 தேர்தலில் நெடுங்காடு தொகுதியில் வென்று யாரும் எதிர்பார்க்காத வகையில் அமைச்சரானார் சந்திர பிரியங்கா. போக்குவரத்துத் துறை, கலைப்பண்பாட்டுத்துறை என பல முக்கியத் துறைகள் இவர் வசம் இருந்தன. காரைக்காலிலுள்ள மற்றொரு என்.ஆர்.காங்கிரஸ் எம்எல்ஏ-வான திருமுருகனுக்கு பிரியங்காவுக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவம் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், சமீபத்தில் காரைக்காலில் முதல்வர் ரங்கசாமி பிறந்தநாளுக்கு பேனர் வைப்பதில் சந்திர பிரியங்கா, திருமுருகன் ஆதரவாளர்கள் இடையே மோதல் வெடித்தது. இந்த மோதலில் திருமுருகன் ஆதரவாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதுவும் திருமுருகன் வட்டத்தை திகைக்க வைத்தது

திருமுருகன் எம் எல் ஏ (இடது)

சந்திர பிரியங்கா என்.ஆர்.காங்கிரஸில் இருந்தாலும் கடந்த முறை காங்கிரஸுடனும் நெருக்கமாக இருந்தார். அதேபோல் இம்முறை பாஜகவிடம் நெருக்கம் பாராட்டினார். அடிக்கடி இணையத்தில் நடனம், அம்மன் வேடம், இணைய வீடியோக்கள் வெளியிடுவதிலும் அவருக்கு ஆர்வமுண்டு.

முதல்வர் ரங்கசாமி

கடந்த சில மாதங்களாக சந்திர பிரியங்காவுக்கு குடும்பத்துக்குள் சில பிரச்சினைகள். அதையொட்டி அவர் சில முடிவுகளை எடுத்து அதை நோக்கி செயல்படத் தொடங்கியது தான் தற்போதைய பிரச்சினைகளுக்கு காரணம் என்கிறார்கள். அவர் எடுத்த முடிவுகள் முதல்வர் ரங்கசாமிக்கு பல தரப்பில் இருந்தும் தர்மசங்கடத்தை உண்டாக்கியதாக கூறப்படுகிறது.

மத்திய அமைச்சர் எல்.முருகன் மூலமாக பாஜக தரப்பில் சந்திர பிரியங்கா மிகவும் நெருக்கம் காட்டத் தொடங்கினார். இதை ரங்கசாமி அவ்வளவாய் ரசிக்கவில்லை என்கிறார்கள். இந்நிலையில், தீடிரென அமைச்சர் பதவியிலிருந்து விலகுவதாக கடந்த 10-ம் தேதி சந்திர பிரியங்கா அதிரடி கிளப்பினார்.

ஆளுநர் தமிழிசையுடன் சந்திர பிரியங்கா...

"ஜாதிய ரீதியிலும், பாலின ரீதியிலும் தாக்குலுக்கு உள்ளானேன்" என தனது ராஜினாமாவுக்கான காரணத்தை அவர் சொன்ன போது புதுச்சேரி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. புதுச்சேரியில் இதுவரை இரு பெண்கள் மட்டுமே அமைச்சராக இருந்துள்ளனர். அதிலும் 40 ஆண்டுகளுக்குப் பிறகு அமைச்சராக இருந்த பட்டியலினத்தைச் சேர்ந்த சந்திர பிரியங்கா, நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீடு சட்டமாகி இருக்கும் சூழலில் இத்தகையை குற்றச்சாட்டை தெரிவித்ததை எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ளன. சந்திர பிரியங்கா யாருக்கு எதிராக குற்றம்சாட்டுகிறார் என்ற கேள்வியை அவர்கள் கேட்கத் தொடங்கி இருக்கிறார்கள்.

சந்திர பிரியங்கா தனது ராஜினாமா கடிதத்தில், ‘புதுவையில் பெரும்பான்மையாக உள்ள 2 சமூகங்களான வன்னியர், பட்டியலின சமூகங்களின் எம்எல்ஏ-க்கள், புதுவை மக்களுக்காக அயராது பாடுபட்டு வருகின்றனர். அச்சமூகங்கள் மேலும் மேம்பட காழ்ப்புணர்ச்சி இல்லாத அரசியலை உறுதி செய்ய காலியாகும் அமைச்சர் பதவியை வன்னியர், பட்டியலினம் அல்லது சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த ஒருவருக்கு அளித்து நியாயம் செய்ய வேண்டும்’ என ரங்கசாமியை வலியுறுத்தியுள்ளார். இந்த மூன்று பிரிவுக்குள்ளும் அடங்காத திருமுருகனுக்கு அமைச்சர் பதவி தரக்கூடாது என்பதையே இப்படி மறைமுகமாக சுட்டிக்காட்டி இருக்கிறார் சந்திர பிரியங்கா.

சபாநாயகர் செல்வம்

சந்திர பிரியங்கா கிளப்பிய பூகம்பம் அடங்கும் முன்பே இந்த விவகாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. சந்திர பிரியங்கா ராஜினாமா செய்யவில்லை அவர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் என்றும் தனது துறையை அவர் சரியாக கவனிக்காததால் பதவி நீக்கம் செய்யப்பட்டார் என்று புதுவை சபாநாயகர் செல்வம் புதுக்குண்டை வீசி இருக்கிறார்.

அவரை பதவி நீக்கம் செய்து அதற்கான கடிதத்தை முதல்வர் ரங்கசாமி துணை நிலை ஆளுநரிடம் கொடுத்ததை அறிந்து கொண்ட சந்திர பிரியங்கா, முந்திக்கொண்டு ராஜினாமா அறிவிப்பு செய்துள்ளதாக செல்வம் கூறியிருப்பது புதுவை அரசியலில் புது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

இன்று நவராத்திரி திருவிழா ஆரம்பம்... என்னென்ன விசேஷம்? எப்படி கொண்டாடுவது?!

x