'நான் மாநகராட்சி ஸ்டாப் பேசுகிறேன்' - மனு கொடுத்த மக்களை போனில் அழைத்துப் பேசும் ஆணையாளர்!


மதுரை: குறைதீர் முகாம்களில் அதிகாரிகள் தீர்வு கண்டதாக கூறும் மனுக்களை மதுரை மாநகராட்சி ஆணையாளர் தினேஷ்குமார் வாரந்தோறும் ஆய்வு செய்து, அவற்றில் சிலவற்றை ரேண்டமாக எடுத்து மனு கொடுத்த மக்களிடம் தொலைபேசியில் அழைத்து சாதாரண ஊழியர் போல் விசாரிக்கிறார்.

அப்போது, அதிகாரிகள் பொய்யான தகவல் தந்திருப்பதாக தெரியவந்தால் அந்த அதிகாரிகள் மீது நடவடிக்கையும் எடுத்து வருகிறார் ஆணையர். ஆணையரின் இந்த நடவடிக்கையால் குறைதீர் கூட்டத்தில் வழங்கப்படும் மனுக்களுக்கு உடனுக்குடன் தீர்வு காணப்பட்டு பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. மதுரை மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் வாரந்தோறும் செவ்வாய்கிழமை குறைதீர் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த குறைதீர் கூட்டங்களில் மேயரும் ஆணையரும் கலந்துகொண்டு பொதுமக்களிடம் நேரடியாக மனுக்களை பெறுகிறார்கள்.

இந்த குறைதீர்க்கும் முகாமில் பொதுமக்கள் குடிநீர், பாதாள சாக்கடை இணைப்பு, வீட்டு வரி பெயர் மாற்றம், புதிய சொத்து வரி விதிப்பு, கட்டிட வரைபட அனுமதி, தெருவிளக்கு, தொழில்வரி உள்ளிட்ட தங்கள் கோரிக்கை மனுக்களை பொதுமக்கள் வழங்குகிறார்கள். இந்த குறைதீர் முகாம்கள், ஆரம்ப காலங்களில் சம்பிரதாயத்திற்கு நடந்து வந்தது. ஆனால், ஆணையாளர் தினேஷ்குமார் வந்தபிறகு, இந்த முகாம்களில் வழங்கப்படும் மனுக்களை ஆய்வு செய்ய ஆரம்பித்தார். அந்த ஆய்வில், அதிகாரிகளால் நிராகரிக்கப்படும் மனுக்கள் எண்ணிக்கை அதிகமாகவும், தீர்வு காணப்படும் மனுக்கள் குறைவாகவும் இருந்தது.

அப்படியே தீர்வு காணப்பட்டதாக கூறப்பட்ட மனுக்களையும் ஆய்வு செய்தபோது, அதுவும் தீர்வு காணப்படாமலே தீர்வு காணப்பட்டுவிட்டதாக பொய்யான தகவல் அளித்திருந்ததும் தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த ஆணையர் தினேஷ்குமார், வாரந்தோறும் நடக்கும் இந்த முகாம்களில் பொதுமக்கள் வழங்கும் மனுக்களை முழுமையாக ஆய்வு செய்ய ஆரம்பித்தார். அவரது இந்த நடவடிக்கையால் சமீப காலமாக அதிகாரிகள், பொதுமக்கள் வழங்கும் ஒவ்வொரு மனுவுக்கும் விரைவாக தீர்வு காண ஆரம்பித்தனர். அதனால், குறைதீர் முகாம்களில் மனுக்கள் கொடுக்க பொதுமக்கள் ஆர்வமடைந்துள்ளனர்.

ஆனாலும், ஒவ்வொரு வாரமும் மண்டல அலுவலங்களில் செவ்வாய்க் கிழமை நடக்கும் குறைதீர் கூட்டங்களில் பங்கேற்க வரும் ஆணையர் தினேஷ்குமார், அதற்கு முந்தைய வாரங்களின் குறைதீர் கூடங்களில் வழங்கி தீர்வு காணப்படாத மனுக்கள், தீர்வு காணப்பட்ட மனுக்களை ஆய்வு செய்கிறார். காரணமே இல்லாமல் அதிகாரிகள் நிராகரிக்கும் மனுக்களை ஆய்வு செய்து, தீர்வு காண வாய்ப்பிருந்தால் அதிகாரிகளை எச்சரித்து மீண்டும் தீர்வு காண வைக்கிறார்.

அதுபோல், தீர்வு காணப்பட்டதாக கூறப்படும் மனுக்களை ஆய்வு செய்து, அதில் ரேண்டமாக மூன்று அல்லது நான்கு மனுக்களை எடுத்து அதனை வழங்கிய பொதுமக்களை தொலைபேசியில் அழைக்கும் ஆணையாளர் தினேஷ்குமார், அவர்களிடம், சாதாரண பணியாளர் போல் பேசி, “நான் மாநகராட்சி பணியாளர் பேசுகிறேன், நீங்கள் கடந்த கூட்டத்தில் கொடுத்த மனுவுக்கு தீர்வு காணப்பட்டுவிட்டதா?” என விசாரிக்கிறார்.

அதற்கு அவர்கள், “ஆம், தீர்வு காணப்பட்டுவிட்டது” என்று சொன்னால், “நன்றி” என்று சொல்லி தொலைபேசியை வைத்து விடுகிறார் ஆணையர். மாறாக, “என்னோட மனுவுக்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை” அவர்கள் என்று கூறினால், அவர்களிடம் மேலும் விசாரித்து தீர்வு காணப்பட்டதாக கூறிய சம்பந்தப்பட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கிறார். அதன்பிறகு அந்த மனுவை மற்றொரு அதிகாரி வசம் ஒப்படைத்து தீர்வு காண வைக்கிறார்.

ஆணையரின் இந்த தொடர்ச்சியான ஆய்வு நடவடிக்கையால் குறைதீர் முகாம்களில் பொதுமக்கள் வழங்கும் மனுக்களுக்கு உடனுக்குடன் தீர்வு கிடைக்கிறது. இது பொதுமக்கள் மத்தியில் வரவேற்பையும் பெற்றுவருகிறது.

x