மதுரை மல்லிகை கிலோ ரூ.900 ஆக உயர்வு: பண்டிகைகளால் பூக்களுக்கு கிராக்கி


மதுரை: மதுரை மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டில் மல்லிகைப்பூ இன்று திடீரென்று விலை உயர்ந்து ஒரு கிலோ ரூ.900க்கு விற்பனையாகி வருகிறது.

தென் தமிழகத்தில் மதுரை மாட்டுத்தாவணியில் மிகப்பெரிய பூ மார்க்கெட் உள்ளது. இந்த மார்க்கெட்டிற்கு, மதுரை மட்டுமில்லாது, தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும் பல்வகை பூக்களை விற்பனைக்காக விவசாயிகள், சிறு வியாபாரிகள் கொண்டு வருகிறார்கள். அந்தப் பூக்களை, பொதுமக்கள், சிறு வியாபாரிகள் வாங்கிச் செல்கிறார்கள்.

பண்டிகை காலங்கள், விசேஷ நாட்கள் வர உள்ளதால் பூக்கள் விலை தற்போதே மெல்ல மெல்ல உயர ஆரம்பித்துள்ளது. இதில், மதுரை மல்லிகை ரூ.900 ஆக இன்று விலை உயர்ந்துள்ளது. அதனால், சில்லறை பூக்கடைகளில் மல்லிகைப்பூக்களுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து மாட்டுத்தாவணி பூ மார்க்கெட் வியாபாரிகள் சங்கத் தலைவர் ராமச்சந்திரன் கூறுகையில், ''இதுவரை மதுரை மல்லிகை கிலோ ரூ.300 முதல் ரூ.400 வரை விற்பனையாது. இந்தச் சூழலில் மதுரை மல்லிகை இன்று கிலோ ரூ.900 ஆக விலை உயர்ந்துள்ளது. முல்லை ரூ.600, பிச்சிப்பூ 500, சம்பங்கி ரூ.200, செவ்வந்தி ரூ.200 அரளி ரூ.300, பட்டன் ரோஸ் ரூ.150, பன்னீர் ரோஸ் ரூ.200, செண்டுமல்லி ரூ.60 கனகாரம்பரம் ரூ.200 விற்பனையாகிறது.

மற்ற பூக்கள் விலையும் சற்று கூடுதலாக உள்ளது. வரும் நாட்களில் கடைசி ஆடி வெள்ளி, வரலெட்சுமி பூஜை போன்ற விசேஷ நாட்கள் வருவதால் மல்லிகை மற்றும் மற்ற பூக்கள் விலையும் அதிகரிக்க வாய்ப்புள்ளது'' என்றார்.

x