சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் அர்ஜென்டினா அணி 20 ஓவரில் 427 ரன்கள் குவித்து உலக சாதனை படைத்துள்ளது.
உலகம் முழுவதும் மகளிர் கிரிக்கெட் மீதான ஆர்வம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆடவர் கிரிக்கெட்டை போலவே மகளிர் கிரிக்கெட்டிலும் ஸ்டார் பிளேயர்கள் உருவாகி வருகின்றனர். இந்நிலையில், அர்ஜென்டினா மகளிர் கிரிக்கெட் அணி மிகப்பெரிய உலக சாதனையை படைத்துள்ளது.
அர்ஜென்டினாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சிலி அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கு இடையேயான முதலாவது ஆட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது.
முதலில் பேட்டிங் செய்த அர்ஜென்டினா அணி 20 ஓவரில் 1 விக்கெட்டை மட்டுமே இழந்து 427 ரன்கள் குவித்து உலக சாதனை படைத்தது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், அர்ஜென்டினா அணி ஒரு சிக்சர் கூட அடிக்கவில்லை.
லூசியா டெய்லர் 84 பந்தில் 169 ரன்னும், அல்பர்ட்டினா காலென் 84 பந்தில் 145 ரன்னும், மரியா 16 பந்தில் 40 ரன்னும் எடுத்தனர். சிலி தரப்பில் 64 நோ பால்கள் வீசினர். இதையடுத்து அர்ஜென்டினா அணி 20 ஓவரில் 427 ரன்கள் குவித்தது.
அதைத் தொடர்ந்து விளையாடிய சிலி அணி 15 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 63 ரன் மட்டுமே எடுத்து 364 ரன் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இதன்மூலம் அர்ஜென்டினா மகளிர் கிரிக்கெட் அணி புதிய உலக சாதனையை படைத்துள்ளது. இந்த சாதனையை தகர்ப்பது மிகவும் கடினம் என்கிறார்கள் கிரிக்கெட் வல்லுநர்கள்.