கருணாநிதியின் ‘மூத்த பிள்ளை’க்கு வந்த சோதனை!


கருணாநிதி

1942-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் கையெழுத்துப் பிரதியாக ‘முரசொலி’யை மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி தொடங்கினார். அதற்கு முன்பே அண்ணா ‘திராவிட நாடு’ பத்திரிகையை தொடங்கி நடத்திவந்தார். திமுக 1949-ம் ஆண்டு உதித்த பிறகு அக்கட்சியினரால் ஏராளமான பத்திரிகைகள் நடத்தப்பட்டன. திமுகவில் கருணாநிதி வளர, வளர முரசொலியும் வளர்ந்து மற்ற பத்திரிகைகளை எல்லாம் ஓரம்கட்டி திமுகவின் அதிகாரபூர்வ பத்திரிகையானது ‘முரசொலி’.

தான் தொடங்கிய ‘முரசொலி’யை “என் மூத்த பிள்ளை” என்று கருணாநிதி உயர்வாக குறிப்பிடுவது வழக்கம். அந்த ‘மூத்த பிள்ளை’க்கு இப்போது சோதனை வந்துள்ளது. அதுவும் கழகம் ஆளும் கட்சியாக இருக்கும்போதே!

கடந்த 4-ம் தேதி இரவு 10 மணியளவில் ‘முரசொலி’யின் முகநூல் பக்கம் ஹேக்கர்கள் மூலம் முடக்கப்பட்டது. இதுபற்றி முரசொலி பொது மேலாளர் ராஜசேகரன் உடனடியாக போலீஸில் புகார் அளித்தார். முடக்கத்தை நீக்க 200 அமெரிக்க டாலர்கள் கேட்டு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளதாகவும் தனது புகாரில் அவர் சொன்னது இன்னொரு அதிர்ச்சி ரகம்.

வழக்கமாக, திமுகவுக்கு ஆதரவாக சமூக ஊடகங்களில் மீம்ஸ் கிரியேட் செய்து போடுபவர்களுக்கு 200 ரூபாய் தரப்படுவதாக ஏற்கெனவே கிண்டல் கேலிகள் உண்டு. இந்நிலையில், ‘டாலர் என்றாலும் 200 தானா?’ என்று சமூக ஊடகங்களில் கேலியாக சில்லறை சத்தம் கேட்கிறது.

‘முரசொலி’ முகநூல் பக்கத்தை முடக்கிய குற்றவாளிகளைப் பிடிக்க இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் ஒரு வாரத்துக்கு மேலாகியும் ஹேக் செய்யப்பட்ட பக்கத்தை இன்னும் மீட்க முடியாமல் திணறி வருகிறார்கள்.

ஹேக் செய்யப்பட்ட ‘முரசொலி’ பக்கத்தில் விரும்பத்தகாத படங்களையும் வீடியோக்களையும் பதிவேற்றி இருக்கின்றனர். இதற்கு முன்பு 22 ஆயிரம் ஃபாலோயர்கள் மட்டுமே இருந்த நிலையில், ஹேக் செய்யப்பட்ட பிறகு இந்த எண்ணிக்கை குப்பென்று 20 லட்சமாக உயர்ந்திருக்கிறது. இதைப் பார்த்துவிட்டு, “இத்தனை நாள் இவர்கள் எல்லாம் எங்கே போயிருந்தார்கள்?” என்று சற்றே ஆடிப்போய் கிடக்கிறார்கள் உடன்பிறப்புகள்!

டெய்ல் பீஸ்: முடக்கப்பட்ட முரசொலி ஃபேஸ்புக் பக்கத்தை மீட்க முடியாமல் போனதால் விரும்பத்தகாத படங்களை சளைக்காமல் பதிவிட்டுக்கொண்டே இருந்தார்கள் கில்லாடி ஹேக்கர்கள். இந்த ரோதனையை தாங்கமுடியாமல் முரசொலி தனது ஃபேஸ்புக் பக்கத்தையே ஒரேயடியாக நீக்கி நிம்மதிப் பெருமூச்சு விட்டிருக்கிறது!

x