பெரியாறு குடிநீர் திட்டம் - 38 மேல்நிலை தொட்டிகளில் குடிநீர் ஏற்றி சோதனை ஓட்டம்


படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி.

மதுரை: பெரியாறு குடிநீர் திட்டத்தில் கட்டிய 38 மேல்நிலை குடிநீர் தொட்டிகளில், குடிநீர் ஏற்றி சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.

மதுரை மாநகராட்சி சார்பில் மக்களின் குடிநீர் தேவைக்காக, முல்லைப்பெரியாறு குடிநீர் திட்டம் நிறைவேற்றப்படுகிறது. இதற்காக லோயர் கேம்ப் பகுதியில் இருந்து 125 எம்எல்டி(MLD) நீர் எடுத்து சுத்திகரித்து மக்களுக்கு வழங்குவதற்கான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்த திட்டத்தில் கொண்டு வரப்படும் குடிநீர், பொதுமக்களுக்கு வீடு, வீடாக விநியோகம் செய்வதற்காக மாநகராட்சி சார்பில் 100 வார்டுகளில், 38 மேல்நிலை குடிநீர் தொட்டிகள் கட்டப்பட்டுள்ளது. வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் லோயர் கேம்ப் பகுதியில் இருந்து மதுரைக்கு குடிநீர் கொண்டு வருவதற்கான குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் நிறைவு பெற்று ஏற்கெனவே சோதனை ஓட்டம் நடந்து வருகிறது.

தற்போது அந்த குடிநீர், மேல்நிலை தொட்டிகளில் ஏற்றி சோதனை செய்யும் பணி தொடங்கி உள்ளது. இந்த சோதனை ஓட்டம் முடிந்தபிறகு, மேல்நிலை குடிநீர் தொட்டிகளில் இருந்து குடிநீர் விநியோக குழாய்கள் மூலம் வீடுகளுக்கு குடிநீர் வழங்குவதற்கான சோதனை ஓட்டமும் விரைவில் நடத்தப்பட உள்ளது.

இந்த சோதனை ஓட்டம் அனைத்தும் வெற்றிகரமாக முடிந்தபிறகு, முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்த திட்டத்தை மக்களுக்கு தொடங்கி வைக்க உள்ளார். அதற்காக, மாநகராட்சி அதிகாரிகள், இரவு, பகலாக பெரியாறு கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகளில் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், எப்போது இந்த திட்டம் தொடங்கி வைக்கப்படும், அதன் மூலம் மக்கள் குடிநீர் பெறுவார்கள் எனத்தெரியவில்லை.

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், “100 வார்டுகளில் குடிநீர் குழாய் பதித்து வீட்டு இணைப்பு கொடுக்கப்பட்ட பிறகே, திட்டம் தொடங்குவது பற்றி ஆலோசிக்கப்படும்” என்றனர்.

x