ஆளுநரின் தேநீர் விருந்து புறக்கணிப்பு - திமுக கூட்டணி கட்சிகள் அறிவிப்பு


சென்னை: சுதந்திர தினத்தையொட்டி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக திமுகவின் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், மதிமுக, விசிக, கம்யூனிஸ்ட்கள், மமக உள்ளிட்ட கட்சிகள் அறிவித்துள்ளன.

நாட்டின் 78வது சுதந்திர தினம் வரும் ஆகஸ்டு 15ம் தேதி கொண்டாடப்படுகிறது. சுதந்திர தினத்தை முன்னிட்டு கோட்டைகொத்தளத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடி ஏற்றுவார். சுதந்திர தினத்தன்று மாலை ஆளுநர் அரசியல் கட்சிகளுக்கு தேநீர் விருந்தளிப்பது வழக்கம். இந்த ஆண்டும் சுதந்திர தினத்தை ஒட்டி ஆளுநர் ரவி தேநீர் விருந்துக்கு பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்தார்.

இந்நிலையில், சுதந்திர தினத்தன்று ஆளுநர் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள், மதிமுக ஆகியவை அறிவித்துள்ளன.

இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சுதந்திர தினத்திற்கு ஆளுநர் தேநீர் விருந்துக்கு அழைத்திருக்கிறார். அவரது அழைப்பிற்கு நன்றி. ஆனால், கடந்த எழுபதாண்டுகளில் இல்லாத அளவிற்கு நரேந்திர மோடியின் ஆட்சிக் காலத்தில் ஆளுநர்களின் செயல்பாடுகள் கட்சி அரசியல் சார்ந்ததாக அமைவதில் மக்களாட்சியின் மாண்புகள் சீர்குலைக்கப்படுகிறது.

அவ்வகையில் தமிழ்நாட்டின் ஆளுநராக பதவியேற்ற நாளிலிருந்து தமிழ்நாட்டின் நலனுக்கும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கும் எதிராகவே தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்பாடுகள் இருக்கின்றன.

மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் நியமிப்பதில் முட்டுக் கட்டை போடுவாதால், பட்டப்படிப்பு முடிந்தும் மாணவர்களுக்கு பட்டமளிப்பு நிகழ்வு நடைபெறுவதில் தாமதம் ஏற்படுகிறது. மேலும், ஆளுநர் பதவிக்காலம் முடிந்தும் அந்தப் பதவியில் தொடர்வது அரசமைப்புக்கு எதிரானது. அதனால், ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக புறக்கணிக்கின்றோம்' இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே போல மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பல்வேறு துறைகளில் வளர்ச்சியில் சிறந்து விளங்கும் தமிழ்நாட்டை இன்று வரை வழிநடத்துவது திராவிடச் சித்தாந்தமே. திராவிடச் சித்தாந்தத்திற்கு எதிராகத் தொடர்ந்துவெளிப்படையாகக் குரல் கொடுத்து வருகிறார். தனது பதவிக் காலம் முடிந்த பின்னரும் இன்னும் பதவியில் நீடிப்பது ஜனநாயக மாண்புகளுக்கு எதிரானது. எனவே மனிதநேய மக்கள் கட்சி ஆளுநர் வழங்கும் தேநீர் விருந்தை புறக்கணிக்கிறது’ என கூறியுள்ளார். இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலர் முத்தரசன், 'தமிழக மக்களின் நலனுக்கு எதிராக கவர்னர் ஆர்.என்.ரவி செயல்படுவதால், சுதந்திர தினத்தையொட்டி அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிக்கிறோம்' என்றார்.

x