காஞ்சிபுரத்தில் ரூ.6 கோடியில் ராஜாஜி சந்தை: முதல்வர் ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தார்


காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் ரூ.6.81 கோடியில் கட்டப்பட்ட ராஜாஜி சந்தையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் நேற்று திறந்து வைத்தார். குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அமைச்சர் தா.மோ.அன்பரசன் குத்துவிளக்கேற்றி சந்தையின் முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.

கடந்த 1933-ம் ஆண்டு ரயில்வேசாலையில் கட்டப்பட்டது காஞ்சிபுரம் ராஜாஜி சந்தை. மொத்தம் 90 ஆண்டுகள் இந்த சந்தை பயன்பாட்டில் இருந்தது. அதில் இருந்த பல்வேறு கட்டிடங்கள் இடிந்து விழும் நிலையில் இருந்தன. இதனால் அந்தக் கட்டிடங்கள் அனைத்தும் இடிக்கப்பட்டு புதிய கட்டிடங்கள் அமைக்கப்பட்டன.

இதற்கான பணிகள் 2022-ம்ஆண்டு மே 20-ம் தேதி தொடங்கியது. மொத்தம் ரூ.6 கோடி 81 லட்சம் மதிப்பில் 242 கடைகள்அமைக்கப்பட்டுள்ளன. சுற்றுப்புறத்தில் 66 கடைகளும், மத்திய பகுதியில் 182 கடைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

இதன் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார். அமைச்சர் தா.மோ.அன்பரசன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில்ஆட்சியர் கலைச்செல்வி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் க.சுந்தர், சி.வி.எம்.பி.எழிலரசன், மாநக ராட்சி மேயர் மகாலட்சுமி உட்பட பலர் பங்கேற்றனர்.

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் பகுதியில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் செங்கல்பட்டு நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநரக அலுவலக கட்டிடத்தையும் முதல்வர் திறந்து வைத்தார். இதில் ஆட்சியர் ச.அருண்ராஜ், சார் ஆட்சி யர் நாராயண சர்மா, அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.

x