சென்னை: சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பணியில் 1 லட்சம் போலீஸார் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும், முதல்வர் கொடி ஏற்ற உள்ள கோட்டை பகுதியைச் சுற்றி 5 அடுக்கு பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் வரும் 15-ம்தேதி சுதந்திர தின விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம் சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசியக்கொடியை ஏற்றி, விழா பேருரையாற்றுகிறார். விழா நடைபெறும் கோட்டை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் முழுவதும் போலீஸாரின் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும், சென்னை பெருநகர காவல் ஆணையார் அருண் உத்தரவின்பேரில், கூடுதல் ஆணையர்கள் கண்ணன் (தெற்கு), சுதாகர் (போக்குவரத்து), நரேந்திர நாயர் (வடக்கு) ஆகியோர் மேற்பார்வையில், 9 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட உள்ளனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னை பெருநகர காவல் எல்லைக்கு உட்பட்ட சென்னை விமான நிலையம் (7 அடுக்கு பாதுகாப்பு), ரயில் நிலையங்கள், பேருந்து முனையங்கள், பேருந்து நிலையங்கள், வணிக வளாகங்கள், கடற்கரைப் பகுதிகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் இதர முக்கிய இடங்களில் கூடுதலாக போலீஸார்நியமிக்கப்பட்டு, தீவிர சோதனைகள் மற்றும் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தபட்டுள்ளது.
இதேபோல், கடல் வழியாக சமூக விரோதிகள் ஊடுருவலைத் தடுக்க, கடலோர காவல் குழுமப்பிரிவு போலீஸார் ரோந்து பணிகளை முடுக்கி விட்டுள்ளனர். சந்தேக நபர்களின் நடமாட்டம் தென்பட்டால் அதுகுறித்து உடனடியாக தகவல் தெரிவிக்கும்படி மீனவமக்களுக்கு போலீஸார் அறிவுறுத்தி உள்ளனர்.
இதுதவிர சென்னையிலுள்ள அனைத்து தங்கும் விடுதிகள் மற்றும் ஓட்டல்களில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, சந்தேக நபர்களின் நடமாட்டம் குறித்து ஏதேனும் தகவல் இருந்தால் காவல்துறைக்கு தெரிவிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், சென்னை பெருநகர் முழுவதும் அந்தந்த காவல் சரகஎல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் நான்கு சக்கர மற்றும் இருசக்கரரோந்து வாகனங்கள் மூலம்ரோந்துப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு, முக்கியமான இடங்களில் தடுப்புகள் அமைத்து காவல் துறையினர் மூலம் தீவிர வாகனத்தணிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதேபோல், தமிழகம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகளை டிஜிபி சங்கர் ஜிவால் முடுக்கி விட்டுள்ளார். அதன்படி, சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு, தமிழகத்தில் சென்னை உட்படமுக்கிய ரயில் நிலையங்களில் பாதுகாப்பு ஏற்பாடு பலப்படுத்தப்பட்டுள்ளன. பாதுகாப்புப் பணியில் 1,500 ரயில்வே போலீஸார் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இவர்களுடன் ரயில்வே பாதுகாப்பு படை வீரர்களும் (ஆர்.பி.எஃப்) இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.
இதுகுறித்து ரயில்வே காவல்துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘சுதந்திர தினத்தை முன்னிட்டு, ரயில்வே போலீஸார் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.சோதனைக்கு பிறகே உள்ளேசெல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்பதால், 45 நிமிடங்களுக்கு முன்பாக பயணிகள் வர அறிவுறுத்தப்படுகின்றனர்’’ என்றனர்