சூசையார்பட்டினம் பங்குப் பேரவையில் ஆதிதிராவிட வகுப்பினருக்கும் இடம்: உயர் நீதிமன்றம் உத்தரவு


மதுரை: சிவகங்கை சூசையார்பட்டினம் பங்குப் பேரவையில், ஆதிதிராவிட வகுப்பினருக்கு இடமளிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிவகங்கை சூசையார்பட்டினத்தைச் சேர்ந்த ஆரோக்கிய சேகரன் தைனேஸ், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், “சூசையார்பட்டினம் கிராமத்தில் சூசையப்பர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் நடைபெறும் திருவிழாவில் ஆதிதிராவிட வகுப்பைச் சேர்ந்தவர்களை சப்பரம் தூக்குவதற்கும், இறந்தவர் உடலை கொண்டு செல்லும் தும்பாவை பயன்படுத்தவும், பங்கு பேரவையில் உறுப்பினர்களாக சேர்க்கவும் அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும்” என கோரி இருந்தார்.

இந்த மனுவை இன்று விசாரித்து நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், “மனுதாரர் தரப்பில், பங்கு பேரவையில் ஆதிதிராவிட வகுப்பினரை சேர்ப்பதில்லை. ஆதிதிராவிட வகுப்பினருக்கு இறந்தவர்கள் உடலை எடுத்துச் செல்வதற்கான பங்குக்கு சொந்தமான வண்டி வழங்கப்படுவதில்லை.

அங்குள்ள குளத்தில் தண்ணீர் எடுக்க ஆதிதிராவிட வகுப்பினரை அனுமதிப்பதில்லை என புகார் தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்த புகார்கள் உண்மையாக இருந்தால் அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 17-ன் படி தீண்டாமை பாகுபாடு இருப்பது உறுதியாகும்.

அதேசமயம் சிவகங்கை மறைமாவட்ட ஆயர் தரப்பில், மனுதாரர் குறிப்பிட்டிருப்பது போல் பாகுபாடுகள் எதுவும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இவற்றை கருத்தில் கொண்டு சூசையார்பட்டினம் கிராம பங்குப் பேரவையில் ஆதிதிராவிட வகுப்பினரும் இருக்கும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இறந்தவர்களின் உடலை எடுத்துச் செல்லும் வண்டி, ஆலயத்திற்கு சொந்தமானதாக இருந்தால் அதை அனைத்து சமூகத்தினருக்கும் வழங்க வேண்டும். அதேபோல ஆதிதிராவிட வகுப்பினர் இறப்பின் போது பிரதான வீதி வழியாக சென்று குளத்திலிருந்து நீரை எடுத்து வரலாம்” என உத்தரவிட்டார்.

x