‘ஹிண்டன்பர்க்’ பரபரப்பு முதல் செ.பா ஜாமீன் வழக்கின் இறுதி வாதம் வரை: டாப் 10 விரைவுச் செய்திகள் 


ஹிண்டன்பர்க் அறிக்கையில் பரபரப்பு குற்றச்சாட்டு: ஹிண்டன்பர்க் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில், “அதானி குழுமம் தொடர்புடைய வெளிநாட்டு நிறுவனங்களில் செபி தலைவர் மாதபி புரி புச் மற்றும் அவரது கணவர் தவல் புச் ஆகியோர் பங்குகளை கொண்டிருந்தனர். குறிப்பாக, மொரீஷியஸ் மற்றும் பெர்முடா நாடுகளில் கவுதம் அதானியின் சகோதரர் வினோத் அதானி தொடர்புடைய போலி நிறுவனத்தில் செபியின் தலைவர் மாதபியும், அவரது கணவரும் பங்குகள் வைத்திருந்தனர். இதன் காரணமாக, அதானியின் சந்தேகத்துக்குரிய பங்குதார நிறுவனங்கள் மீது செபி இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

செபியின் தலைவராக மாதபி புரியின் செயல்பாடு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதானி குழுமம் மீதான செபியின் விசாரணை குறித்து முழுமையாக ஆய்வு நடத்தப்பட வேண்டும்’ என்று அந்த தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ஹிண்டன்பர்க்கின் குற்றச்சாட்டுகளுக்கு அதானி குழுமமும், செபியின் தலைவர் மாதபி புரியும், அவரது கணவரும் மறுத்துள்ளது. அதேவேளையில், இந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை நடத்தப்படுவது அவசியம் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதானி குழுமத்தின் பங்குகள் நிலவரம்: ஹிண்டன்பர்க் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின் எதிரொலியாக, பங்குச்சந்தையில் திங்கள்கிழமை காலை அதானி குழுமத்தின் பங்குகள் 7% வரை சரிந்தன.

ராகுல் கருத்தும், பாஜக பதிலும்! -“பங்குச் சந்தையில் சில்லறை முதலீட்டாளர்களின் சொத்துகளை பாதுகாக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ள செபியின் நேர்மை, அதன் தலைவர் மீதான குற்றச்சாட்டுகளால் கடும் கேள்விக்கு உட்படுத்தப்படுகிறது” என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு பதிலளித்த பாஜகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு தலைவரான அமித் மாள்வியா, “நமது பொருளாதாரத்தின் மீதான நன்நம்பிக்கையை குறைத்து மதிப்பிடும் இந்த அப்பட்டமான முயற்சி ராகுல் காந்தியின் எண்ணம் என்னவென்பதை வெளிப்படையாகக் காட்டுகிறது. அவரது எண்ணம் இந்தியாவை சிதைப்பதைத் தவிர வேறில்லை என்பது இதன்மூலம் புலப்படுகிறது” என்று சாடியுள்ளார்.

இதனிடையே, ‘இந்த தேசத்தின் பாதுகாப்பையும், பொருளாதாரத்தையும் சீர்குலைக்க ராகுல் காந்தி எல்லா முயற்சிகளையும் செய்கிறார். அவர் மிகவும் ஆபத்தான மனிதர்’ என்று நடிகையும், இமாச்சல பிரதேச எம்.பி.,யுமான கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார்.

“பங்குச் சந்தையை பலவீனப்படுத்த காங்கிரஸ் சதி!” - செபி அமைப்பின் தலைவருக்கு எதிராக ஹிண்டன்பர்க் வெளியிட்ட குற்றச்சாட்டை நாடாளுமன்றக் கூட்டு குழு விசாரிக்க வேண்டும் என்ற காங்கிரஸின் கோரிக்கையை கடுமையாக சாடியுள்ள பாஜக மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத், "இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சியடைய வேண்டும் என்று காங்கிரஸ் விரும்புகிறது. காங்கிரஸ் கட்சி, இந்தியப் பொருளாதாரத்தையும், மொத்த பங்குச் சந்தையையும் பலவீனப்படுத்த சதி செய்கிறது. விரைவில் காங்கிரஸை பாஜக அம்பலப்படுத்தும்” என்று காட்டமாக கூறியுள்ளார்.

சவுக்கு சங்கர் மீது மீண்டும் குண்டர் தடுப்புச் சட்டம்: சவுக்கு சங்கர் தேனி பூதிப்புரம் சாலையில் உள்ள விடுதியில் கடந்த மே 4-ம் தேதி தங்கியிருந்தார். அப்போது கோயம்புத்தூர் போலீஸார் அவரை கைது செய்தனர்.அவரது கார் மற்றும் விடுதி அறையை சோதனை செய்த போது கஞ்சா இருப்பது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து பழனிசெட்டிபட்டி போலீஸார் சவுக்கு சங்கர் மற்றும் அவருடன் இருந்த இருவரையும் கைது செய்து வழக்குப் பதிவு செய்தனர். இதுகுறித்த வழக்கு மதுரை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் பரிந்துரையின் பேரில் ஆட்சியர் ஆர்.வி.ஷஜீவனா குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டத்தில் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஏற்கெனவே கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் குறித்து பொதுமக்கள் மத்தியில் வதந்தி பரப்பி பொதுமக்களை போராடிய தூண்டியதாக சவுக்கு சங்கர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பதிவு செயப்பட்டிருந்தது. இந்த உத்தரவை அண்மையில் சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

கொல்கத்தா போலீஸுக்கு மம்தா ‘கெடு’ - மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெண் மருத்துவர், கடந்த 9-ம் தேதி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டார். கொல்லப்பட்ட பெண் மருத்துவர் அங்கு முதுநிலை மருத்துவப் படிப்பு பயின்று வந்தார். இந்தச் சம்பவத்தைக் கண்டித்து நாடு முழுவதும் மருத்துவமனைகளில் திங்கள்கிழமை போராட்டம் நடந்தது.

4-வது நாளாக மருத்துவர்களின் போராட்டம் நீடித்து வரும் நிலையில், கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி முதல்வர் சந்தீப் கோஷ் திங்கள்கிழமை தனது பதவியை ராஜினாமா செய்தார்.அதேவேளையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மாநில காவல் துறை இந்த வழக்கின் குற்றவாளிகளை வரும் ஆகஸ்ட் 18 ஆம் தேதிக்குள் வழக்கை முடிக்கத் தவறினால், வழக்கின் விசாரணையை சிபிஐயிடம் ஒப்படைப்போம் என்று எச்சரித்துள்ளார்.

‘தங்கலான்’ ரிலீஸுக்கு ரூ.1 கோடி டெபாசிட் : நடிகர் விக்ரம் நடித்துள்ள ‘தங்கலான்’ படத்தை வெளியிடும் முன்பாக ரூ.1 கோடி டெபாசிட் செய்ய வேண்டும் என படத் தயாரிப்பாளரான ஞானவேல்ராஜாவுக்கு கடன் விவகாரம் தொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வங்கதேச அரசு முக்கிய உத்தரவு: ஒரு வாரத்துக்குள் அனைத்து சட்டவிரோத துப்பாக்கிகளை அருகில் உள்ள காவல் நிலையத்தில் ஒப்படைக்குமாறு போராட்டக்காரர்களுக்கு வங்கதேச அரசு கெடு விதித்துள்ளது.

இந்திய அளவில் சென்னை ஐஐடி முதலிடம்! என்பிஏ மற்றும் என்ஐஆர்எஃப் நடத்திய தரவரிசையில் சென்னை ஐஐடி, நாட்டின் ஒட்டுமொத்தப் பிரிவில் சிறந்த கல்வி நிறுவனமாக முதலிடத்தைப் பிடித்துள்ளது. இந்திய அறிவியல் கழகமான ஐஐஎஸ்சி - பெங்களூரு மற்றும் மும்பை ஐஐடி ஆகியவை முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களைப் பிடித்துள்ளன.

புதுச்சேரி முதல்வர் அறிவிப்பு: புதுச்சேரியில் அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் ஆண்டுக்கு ரூ. 5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு வழங்கும் திட்டம் விரைவில் கொண்டுவரப்படும் என முதல்வர் ரங்கசாமி சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.

செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கின் இறுதி வாதம்: சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கு விசாரணையின்போது, அமலாக்கத் துறை தரப்பில், “செந்தில் பாலாஜிக்கு எதிரான விசாரணையை தமிழக அரசு தாமதப்படுத்துகிறது” என்று தெரிவிக்கப்பட்டது.செந்தில் பாலாஜி தரப்பில், “மனுதாரர் தற்போது அமைச்சர் என்ற அதிகாரத்தில் இல்லை. அவருக்கு இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. மனுதாரர் முன்னாள் அமைச்சர். 5 முறை சட்டப்பேரவை உறுப்பினர். எனவே, அவர் எங்கும் தப்பிச் செல்லமாட்டார். எனவே, இதை எல்லாம் கவனத்தில் கொண்டு மனுதாரருக்கு ஜாமீன் வழங்க வேண்டும்” என்று வாதிடப்பட்டது.

அதேவேளையில், ‘ஒவ்வொரு முறை இந்த வழக்கு விசாரணைக்கு வரும்போது அமலாக்கத் துறை வெவ்வேறு விவகாரங்களை சுட்டிக்காட்டிக் கொண்டே இருக்கிறது. எங்களைப் பொறுத்தவரை சட்டவிரோத பணப் பரிமாற்ற தடுப்புச் சட்டத்தின் கீழ் இந்த விவகாரத்தில் விசாரணை நடைமுறைகளை தான் நாங்கள் விசாரிக்கிறோம். இந்த விவகாரத்தில் விசாரணை எப்போது நிறைவடையும்?’ என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், மணிஷ் சிசோடியா வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மேற்கோள்காட்டி, “செந்தில் பாலாஜிக்கும் அதே வகையில் ஜாமீன் வழங்க முடியும்தானே?” என்று அமலாக்கத் துறையிடம் சரமாரியாக கேள்வி எழுப்பினர்.

x