சிவகங்கை: "நான் தொடர்ந்து கைதாவதற்கு அமைச்சர் உதயநிதி தான் காரணம்" என்று சிவகங்கையில் யூடியூபர் சவுக்கு சங்கர் கூறியுள்ளார்.
பெண் காவலர்கள் மற்றும் காவல் அதிகாரிகள் குறித்து அவதூறாக பேசியதாக யூடியூபர் சவுக்கு சங்கர் மே 4-ம் தேதி கைது செய்யப்பட்டார். தொடர்ந்து அவர் மீது தமிழகத்தின் பல பகுதிகளில் அடுத்தடுத்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. தற்போது சிறையில் இருந்து வருகிறார்.
இந்நிலையில், பெண் காவலர்கள் குறித்து இழிவாக பேசியதாக சிவகங்கை மாவட்டம் மதகுபட்டி எஸ்ஐ மகேஸ்வரி அளித்த புகாரின் பேரில் மாவட்ட சைபர் குற்றப் பிரிவு போலீஸார் சவுக்கு சங்கர் மீது வழக்கு பதிந்திருந்தனர். இந்த வழக்கில், சிவகங்கை கூடுதல் மகளிர் சிறப்பு நீதிமன்றதில் அவர் ஆஜராகினார். அவருக்கு நீதிபதி ஆப்ரின்பேகம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
தொடர்ந்து சவுக்கு சங்கர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "சென்னையில் கார் பந்தயம் முடியும் வரை நான் வெளியில் வரக் கூடாது என்பதற்காக தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகிறேன். என் கைதுக்கு உதயநிதிதான் காரணம்” என்று சவுக்கு சங்கர் கூறினார். இதனிடையே, வேறு வழக்குகளில் கைதாகி இருப்பதால், யூடியூபர் சவுக்கு சங்கரை மதுரை மத்திய சிறைக்கு போலீஸார் அழைத்துச் சென்றனர்.
மீண்டும் குண்டர் தடுப்புச் சட்டம்: இதனிடையே, யூடியூபர் சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து தேனி பழனிசெட்டிபட்டி போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சவுக்கு சங்கர் தேனி பூதிப்புரம் சாலையில் உள்ள விடுதியில் கடந்த மே 4-ம் தேதி தங்கியிருந்தார். அப்போது கோயம்புத்தூர் போலீஸார் அவரை கைது செய்தனர்.அவரது கார் மற்றும் விடுதி அறையை சோதனை செய்த போது கஞ்சா இருப்பது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து பழனிசெட்டிபட்டி போலீஸார் சவுக்கு சங்கர் மற்றும் அவருடன் இருந்த இருவரையும் கைது செய்து வழக்குப் பதிவு செய்தனர். இதுகுறித்த வழக்கு மதுரை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் பரிந்துரையின் பேரில் ஆட்சியர் ஆர்.வி.ஷஜீவனா குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டத்தில் இன்று (ஆக.12) வழக்குப் பதிவு செய்யப்பட்டது.