திண்டுக்கல்: பெரியகுளம் அருகே கோயில் பூசாரியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தம்பி திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள டி.கள்ளிப்பட்டியை சேர்ந்த சுப்புராஜ் மகன் நாகமுத்து (22). இவர், கைலாசபட்டியில் உள்ள கைலாசநாதர் கோயிலில் பூசாரியாக பணிபுரிந்தார். 2012 ம் ஆண்டு டிசம்பர் 8 ம் தேதி நாகமுத்து தற்கொலை செய்து கொண்டார். முன்னதாக தனது தற்கொலைக்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தம்பி ஓ.ராஜா, தென்கரை பேரூராட்சி முன்னாள் தலைவர் பாண்டி, மணிமாறன், சிவகுமார், ஞானம், லோகு, சரவணன் ஆகிய ஏழு பேர் காரணம் என கடிதம் எழுதி வைத்திருந்தார். இதை கைப்பற்றிய தென்கரை போலீஸார் ஏழு பேர் மீதும் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கு திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. தற்போது திண்டுக்கல் மாவட்ட பட்டியல் வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் சிறப்பு அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறுகிறது. வழக்கு இறுதிக்கட்ட விசாரணைக்கு வந்தபோது, நீதிபதி முரளிதரன் முன்பு, குற்றம்சாட்டப்பட்ட ஏழு பேரில் ஓ.ராஜா உள்ளிட்ட ஆறு பேர் நேரில் ஆஜராகினர். இதில் குற்றம் சாட்டப்பட்ட பாண்டி வழக்கு விசாரணையின் போதே இறந்துவிட்டார். அரசு தரப்பு வாதங்கள் நடைபெற்றது. இதையடுத்து வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 20ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி முரளிதரன் உத்தரவிட்டார்.