தமிழ்நாடு ரேஷன் கடைகளில் இன்று முதல் பேடிஎம் வழியாக பணம் செலுத்தும் நடைமுறை அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பல்வேறு துறை சேவைகள் டிஜிட்டல் மயமாகி வருகிறது. பல துறைகளில் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் நடைமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளன. ஏற்கெனவே ரேஷன் கடைகளில் டிஜிட்டல் முறையில் பொருட்கள் வாங்கும் நடைமுறை உள்ளது.
அதாவது கைரேகை வைத்து ரேஷன் அட்டை அடையாளம் மூலம் பணம் செலுத்தும் முறை உள்ளது. இல்லாதபட்சத்தில் கண் கருவிழி வழியாக அடையாளம் உறுதி செய்து ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்கும் நடைமுறையும் உள்ளது. இப்படி டிஜிட்டல் முறையில் பொருட்களை ரேஷனில் வாங்க முடியும். இந்த நிலையில் ரேஷனில் பொருட்களை வாங்கும் முறையை மேலும் எளிமையாக்கும் விதமாக தமிழ்நாடு ரேஷன் கடைகளில் இன்று முதல் பேடிஎம் வழியாக பணம் செலுத்தும் நடைமுறை அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
UPI செயலிகள் வாயிலாக பண பரிவர்த்தனை செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று முன்பே தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. அந்த திட்டத்தின் அடிப்படையில் தற்போது இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இனி மக்கள் எளிதாக பேடிஎம் மூலம் ஸ்கேன் செய்து பணத்தை செலுத்த முடியும்.
உங்களிடம் பேடிஎம் இல்லை என்றாலும் வேறு யுபிஐ வழியாகவும் பணம் செலுத்த முடியும். இந்த பணம் நேரடியாக அரசுக்கு சென்று சேரும். அதனால் மக்கள் பணம் அரசுக்கு சென்று சேர்வதோடு மக்களும் எளிதாக பணத்தை செலுத்த முடியும். மேலும் இதன் மூலம் சில்லறை முறைகேடுகள் பல தடுக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
முதல் கட்டமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் 10 நியாய விலை கடைகளில் இந்த திட்டம் கொண்டு வரப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய கூட்டுறவு வங்கியுடன் இணைந்து UPI செயலிகள் வாயிலாக பண பரிவர்த்தனை செய்ய முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.