நிலுவை கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி முதல்வர், வருவாய்த் துறை செயலருக்கு விஏஓ சங்கம் கடிதம்


சென்னை: பணி பாதுகாப்பு உள்ளிட்ட நிலுவை கோரிக்கைகளை விரைவாக நிறைவேற்றித் தரும்படி, முதல்வர், வருவாய்த் துறை செயலர் ஆகியோருக்கு கிராம நிர்வாக அலுவலர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து, முதல்வர் தனிப்பிரிவு, வருவாய்த்துறை செயலர், வருவாய் நிர்வாக ஆணையர், இணை வருவாய் நிர்வாக ஆணையர் ஆகியோருக்கு கிராம நிர்வாக அலுவலர் சங்கம் அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: “வருவாய் நிர்வாக அலுவலர்களுக்கான பொது கலந்தாய்வுக்கான அரசாணையில் உள்ள பல குளறுபடிகளை மாற்றுவது தொடர்பாக பலமுறை தங்களிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இது தொடர்பாக, அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தியும், பொது கலந்தாய்வை பல மாவட்டங்களில் சரியாக நடத்தவில்லை. கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பணியில் பாதுகாப்பு மற்றும் நிலுவை கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் அளிக்கப்பட்டது. அது தொடர்பாக உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். சென்னை உயர்நீதிமன்றம் எங்கள் கோரிக்கைகளை 9 மாதங்களுக்குள் பரிசீலிக்க உத்தரவிட்டுள்ளது.

பல கிராம நிர்வாக அலுவலர்களுக்கு தகுதிகாண பருவம் செய்யப்படாமல் உள்ளது. அதனை விரைவில் முடிக்க வேண்டும். பல இடங்களில் கிராம நிர்வாக அலுவலகம் இல்லை. ஏற்கெனவே உள்ள அலுவலகங்களும் சேதமடைந்துள்ளது. அதையும் சரி செய்து தரவேண்டும். இந்த கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்ற வேண்டும்” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

x