முல்லை பெரியாறு அணை குறித்து வதந்தி: லோயர் கேம்பில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்


விவசாயிகள்

குமுளி: முல்லைப் பெரியாறு அணை குறித்து கேரளாவில் தொடர்ந்து வதந்தி பரப்பப்படுவதைக் கண்டித்து தேனி மாவட்டம் லோயர்கேம்ப்பில் விவசாயிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தேனி மாவட்டம் லோயர் கேம்ப் கர்னல் ஜான் பென்னிகுவிக் மணிமண்டபம் அருகே பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்துக்குச் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் தலைமை வகித்தார்.

இதில், முல்லைப் பெரியாறு அணைக்கு எதிராகத் தொடர்ந்து வதந்தி பரப்பி வரும் கேரள அரசியல்வாதிகளுக்குக் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும், இது தொடர்பான வதந்திகளைப் பரப்பி வரும் சமூகவலைதளங்களை முடக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

முன்னதாக, முல்லைப் பெரியாறு அணை நோக்கி குமுளி மலைச் சாலையில் விவசாயிகள் செல்ல முயன்றபோது போலீஸார் அவர்களைத் தடுத்து நிறுத்தினர். இதனைத் தொடர்ந்து அப்பகுதியிலே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. உத்தமபாளையம் டிஎஸ்பி-யான செங்கோட்டு வேலவன் தலைமையில் ஏராளமான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இது தொடர்பாக விவசாயிகள் கூறுகையில், “முல்லைப் பெரியாறு அணை பலமாக இருக்கிறது என்று உச்ச நீதிமன்றம் 2006 மற்றும் 2014-ம் ஆண்டுகளில் தீர்ப்பளித்துள்ளது. இதனை ரத்து செய்யவேண்டும் என்று கேரளாவைச் சேர்ந்த வழக்கறிஞர் மேத்யூ உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். மேலும், அணை உடைந்து கேரள மக்களுக்குப் பாதிப்பு ஏற்படும் என்றும் தொடர்ந்து அங்கு வதந்தி பரப்பப்படுகிறது. இது தடுத்து நிறுத்தப்பட வேண்டும்” என்றனர்.

x