மாதம் 1,000 நாய்களைப் பிடிக்க இலக்கு: 'பட்டர்ஃபிளை' கூண்டுடன் களமிறங்கிய மதுரை மாநகராட்சி!


மதுரை: மதுரை மாநகராட்சியில் தெருநாய்களை பிடிக்க தூத்துக்குடியைச் சேர்ந்த பயிற்சி பெற்ற சிறப்பு நாய்ப்பிடி குழுவினர் பிரத்தியேக 'பட்டர்ஃபிளை கூண்டு'டன் களம் இறங்கியுள்ளனர். அவர்கள், ஒரு நாளைக்கு 30 வீதம் மாதம் சுமார் 1,000 தெருநாய்களை பிடித்து கருத்தடை செய்வதற்கு இலக்கு நிர்ணயித்துள்ளனர்.

தெரு நாய்களை பிடித்து கருத்தடை செய்வது, மதுரை மாநகராட்சி நிர்வாகத்திற்கு சவாலாக இருப்பதால் நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த முடியில்லை. கடந்த 2015-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி மதுரை மாநகராட்சியில் 47 ஆயிரம் தெருநாய்கள் இருந்துள்ளன. தற்போது இதன் எண்ணிக்கை இரு மடங்கு அதிகரித்துள்ளதாக மாநகராட்சி கருதுகிறது.

இதன் காரணமாக தெருநாய்கள் கடித்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஒவ்வொரு மாதமும் சராசரியாக 1,000 பேர் சிகிச்சைக்கு வருகிறார்கள். ஆண்டுக்கு 10 பேர் ரேபீஸ் தொற்றுள்ள நாய்கள் கடித்து சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழக்கின்றனர்.

அதனால், சமீபகாலமாக மாநகராட்சி தெருநாய்களை பிடிக்க, பொதுமக்களிடம் இருந்து அதிகமான புகார்கள் மாநகராட்சி நகர் நல அலுவலகத்திற்கு வருகின்றன. ஆனால், அவற்றை பிடித்து முறையாக கருத்தடை செய்து, மீண்டும் பிடித்த இடத்திலே விடுவதற்கு மாநகராட்சியில் போதுமான கால்நடை மருத்துவர்கள், நாய்களை பிடிக்கும் ஊழியர்கள், வாகனங்கள் இல்லை.

மேலும், ஒரு நாயை பிடிப்பதற்கு ரூ.1,625 செலவாகிறது. இந்த தொகையில், 50 சதவீதத்தை மத்திய கால்நடை பராமரிப்பு துறை வழங்க வேண்டும். ஆனால், அவர்கள் இதுவரை மதுரை மாநகராட்சிக்கு இதற்கான தொகையை வழங்கவில்லை. இதையடுத்து தற்போதைய ஆணையாளர் தினேஷ்குமார், தெருநாய்களை பிடிக்கவும், அதற்கான 50 சதவீதம் மானியத்தை மத்திய அரசிடம் பெறவும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

இதுகுறித்து மாநகராட்சி நகர் நல அதிகாரிகள் கூறுகையில், ''மாநகராட்சியில் விரைவில் தெருநாய்கள், வீடுகளில் வளர்க்கப்படும் நாய்கள் கணக்கெடுப்பு நடக்க உள்ளது. தெருநாய்கள் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த, அதனை பாதுகாப்பாக பிடித்து கருத்தடை செய்வதற்கான பணியை தூத்துக்குடியை சேர்ந்த ஒரு தொண்டு நிறுவனத்திற்கு டெண்டர் விட்டுள்ளது. இந்த நிறுவனம், 3 கால்நடை மருத்துவர்கள், நாய்களை பிடிக்க பிரத்தியேகப் பயிற்சி பெற்ற 7 பணியாளர்களுடன், மாநகராட்சிப் பகுதியில் தெருநாய்களை பிடிக்க களம் இறங்கியுள்ளனர்.

இவர்களுக்கு நாய்களை பிடிப்பதற்கான உபகரணங்கள், வாகனம், கருத்தடை அறுவை சிகிச்சை செய்வதற்கான தியேட்டர்கள், அதனை பராமரிப்பதற்கான இல்லம் போன்றவற்றை வழங்கப்பட்டுள்ளது. ஒரு நாயை பிடிப்பதற்கு ரூ.1,625 செலவாகிறது. இதில் 50 சதவீதம் மத்திய கால்நடை பராமரிப்பு துறை வழங்க வேண்டும். இந்த தொகையை பெறுவதற்கு நாய்களை கருத்தடை செய்ததற்கான ஆதாரங்களை ஆவணப்படுத்தி, அதனை மத்திய கால்நடை பராமரிப்பு துறைக்கு அனுப்ப உள்ளோம். அந்த ஆவணங்கள் அடிப்படையில் அவர்கள் நமக்கு 50 சதவீதம் மானியம் வழங்குவார்கள். அதுவரை பொதுமக்கள் நலனுக்காக மாநகராட்சி நிதியில் இருந்து நாய்களை பிடித்து கருத்தடை செயவ்தற்கு செலவிடப்படும்.

முன்பு ஒரு நாளைக்கு 10 தெருநாய்கள் வீதம், மாதத்திற்கு 300 தெருநாய்களைப் பிடித்து கருத்தடை செய்யப்பட்டது. இந்த புதிய குழு வந்தபிறகு தற்போது ஒரு நாளைக்கு 30 தெருநாய்கள் வீதம் மாதம் 1,000 தெருநாய்களை பிடித்து கருத்தடை செய்வதற்கு இலக்கு வைத்துள்ளோம். பிடித்த நாய்களை, அறுவை சிகிச்சை செய்வதற்கு முன் 3 நாட்கள் அதற்காக அவை தயார்படுத்தப்படுகின்றன. அறுவை சிகிச்சை செய்தபிறகு மீண்டும் 3 நாட்கள் பாதுகாப்பில் வைத்திருந்துவிட்டு மீண்டும் பிடித்த இடத்திலே கொண்டு வந்துவிடப்படுகிறது. தெருநாய்களை பிடிக்க பாதுகாப்பான பட்டர்ஃபிளை கூண்டு வழங்கப்பட்டுள்ளது. இந்த கூண்டை வைத்து பிடிப்பதால் நாய்களுக்கு எந்த காயமும், தொந்தரவும் ஏற்படாது'' என்றனர்.

ரேபீஸ் நாய்களை பாதுகாக்க தனி அறை: தெருநாய்களை பிடித்து கருத்தடை செய்யும்போதே அதற்கு ரேபீஸ் தடுப்பூசி போடப்படுகிறது. மதுரையில் தெருநாய்களுக்கும் அவற்றால் கடிக்கப்படும் பொதுமக்களுக்கும் மாதம் 1 லட்சம் ரேபீஸ் தடுப்பூசி போடப்படுகிறது. இந்த தடுப்பூசிக்கு ஆகும் செலவை குறைப்பதற்காக, தெருநாய்களை பிடித்து கருத்தடை செய்து அதன் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்படுகிறது. கருத்தடை செய்யப்படும் தெருநாய்கள், பொதுவாக ஆக்ரோஷம் குறைந்து மனிதர்களை கடிப்பது குறைந்துவிடும். சில நாய்கள் ஆக்ரோஷமாக சுற்றித் திரிந்தாலோ அல்லது ரேபீஸ் பாதிப்புள்ள நாயாக தெரிந்தாலோ அவற்றை பிடித்து தனி அறையில் பாதுகாத்து கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்படுகிறது.

x