பணியின் போது இறந்த அரசு ஊழியர்களின் வாரிசுகளுக்கு பல்நோக்கு ஊழியர் பணி - முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு


கோப்புப் படம்

புதுச்சேரி: பணியின் போது இறந்த அரசு ஊழியர்களின் வாரிசுகளுக்கு பல்நோக்கு ஊழியர் பணி வழங்கப்படவுள்ளதாக புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

புதுவை சட்டப்பேரவையில் இன்றைய கேள்வி நேரத்தின்போது பேசிய சுயேட்சை எம்எல்ஏ அங்காளன், "அனைத்துப் பள்ளிகளிலும் தூய்மைப் பணியாளர், காவலாளிகள் இல்லை. இந்தப் பணியிடங்களை நிரப்ப எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?" என்று கேட்டார்.

அதற்கு முதல்வர் ரங்கசாமி, "பணியாளர் நிர்வாக சீர்திருத்த துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து தினக்கூலி ஊழியர்களும் பல்நோக்கு ஊழியர்களாக பணி நியமனம் செய்யப்பட்டுவிட்டனர். எனவே, பல்நோக்கு ஊழியர் பணியிடங்களை நிரப்ப முடியவில்லை. இதற்கு மாறாக ஒப்பந்த பணியாளர்கள் மூலம் இந்த பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது. அரசு துறைகளில் சுமார் 400 பல்நோக்கு ஊழியர் பணியிடங்கள் காலியாக உள்ளது.

கடந்த காலத்தில் தூய்மைப் பணிக்காக நியமிக்கப்பட்டவர்கள் சரியாக பணியை செய்யவில்லை என்ற குறைபாடு உள்ளது. பணியின் போது இறந்த அரசு ஊழியர்களின் வாரிசுகளுக்கு கடந்த 10 ஆண்டாக பணி வழங்கப்படவில்லை. இதனால் தலைமை செயலாளரிடம் அவர்களுக்கு பல்நோக்கு ஊழியர் பணி வழங்கும்படி கோரியுள்ளோம். அவர்களை காவலாளிகளாக நியமிக்கலாம்" என்று முதல்வர் ரங்கசாமி கூறினார்.

x