அனைவருக்கும் பொங்கல் வாழ்த்து, எனக் கூறியபடியே வேட்டியை மடித்து கட்டி கோயிலை தானே சுத்தம் செய்த மத்திய இணை அமைச்சர் செயலால் பக்தர்கள் இன்ப அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள மண்வயல் பகுதியில் இன்று பழங்குடியினருக்கான மத்திய அரசின் நலத்திட்ட உதவிகளை மத்திய இணை அமைச்சர் எல். முருகன் வழங்கினார். நிகழ்ச்சி முடிந்து செல்லும் வழியில் சிவன் கோயிலை பார்த்த அவர் திடீரென வாகனத்தை விட்டு இறங்கி கோயிலுக்குள் சென்றார். அப்போது பொங்கல் விழாவிற்காக கோயிலை சுத்தம் செய்யும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.
அவர்களை கண்டவுடன் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள் எனக் கூறியபடியே வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு கோயிலை சுத்தம் செய்ய துவங்கினார். ஒரு மணி நேரத்திற்கு மேலாக கோயில் சுவர்களை துணியால் நன்றாக துடைத்து பின்பு குழாய் மூலம் தண்ணீர் ஊற்றி தூய்மைப்படுத்தினார். கோயில் மட்டுமின்றி கோயில் முன்பு இருந்த பகுதிகளையும் மத்திய இணை அமைச்சர் எல். முருகன் தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்தார்.
அமைச்சரின் செயலை கோயிலுக்கு வந்த பக்தர்கள் அனைவரும் ஆச்சரியத்துடன் பார்த்தனர். பின்பு அங்கிருந்து மத்திய இணை அமைச்சர் புறப்பட்டுச் சென்றார். அயோத்தி கோயில் திறப்பை ஒட்டி பிரதமர் கோயில்களை சுத்தப்படுத்துமாறு அவர் கட்சியினருக்கு கோரிக்கை விடுத்திருந்தார். இதனை ஏற்று கோயிலை அமைச்சர் முருகன் சுத்தம் செய்ததாக பா.ஜ.கவினர் தெரிவித்தனர்.