சாத்தூர் அருகே பெற்றோரை இழந்து இடியும் நிலையிலுள்ள மண் குடிசையில் தவிக்கும் 4 குழந்தைகள்


சாத்தூர் அருகே முத்தார்பட்டியில் சேதமடைந்த நிலையில் உள்ள மண் வீட்டில் வசிக்கும் சகோதர, சகோதரிகள்.

சாத்தூர்: சாத்தூர் அருகே பெற்றோரை இழந்த சகோதர, சகோதரிகள் 4 பேர் இடிந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ள மண் குடிசையில் வசிக்கின்றனர். தங்களுக்கு பசுமை வீடு கட்டித் தர அரசு முன்வர வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே முத்தார்பட்டியைச் சேர்ந்தவர் ஒச்சான். இவரது மனைவி மெய்யக்காள். இவர்களுக்கு 2 மகள்கள், 2 மகன்கள். கடந்த 2019ல் உடல்நலக் குறைவால் மெய்யக்காள் உயிரிழந்தார். அதைத் தொடர்ந்து, 2021ல் ஒச்சானும் உயிரிழந்தார். பிளஸ் 2 முடித்த மூத்த மகள் ஒச்சம்மாள் (20), குடும்ப வறுமை காரணமாக தனியார் ஆலை ஒன்றில் பணியாற்றி வருகிறார். இளைய மகள் (15) கூலி வேலைக்குச் சென்று வருகிறார். சகோதரிகள் இருவரும் தங்களுக்கு கிடைக்கும் சொற்ப வருமானத்தில் தம்பிகளான கருப்பசாமி (11), பெரியகருப்பசாமி (9) ஆகிய இருவரையும் படிக்க வைக்கின்றனர்.

கருப்பசாமி 9-ம் வகுப்பும், பெரிய கருப்பசாமி 5-ம் வகுப்பும் படிக்கின்றனர். இந்நிலையில், கடந்த ஆண்டு பெய்த மழையால் மண்ணால் கட்டப்பட்ட இவர்களது குடிசை வீட்டின் ஒரு பகுதி சுவர் இடிந்து சேதம் அடைந்தது. ஆனாலும், வெயில், மழையை பொறுத்துக்கொண்டு அந்த வீட்டிலேயே வசித்து வருகின்றனர்.

இது குறித்து ஒச்சம்மாள் கூறுகையில், ‘எனக்குப் போதிய வருமானம் கிடைக்காததால், எனது தங்கையும் கூலி வேலைக்குச் சென்று தம்பிகளை படிக்க வைக்கிறோம். மழையில் வீட்டின் ஒரு பக்கச் சுவர் இடிந்து விழுந்து சேதம் அடைந்தது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் முறையிட்டோம். அதிகாரிகள் வந்து ஆய்வு மேற்கொண்டு, புதிய வீடு கட்டித் தருவதாக அளவீடு செய்தனர்.

ஆனால், இன்று வரை உதவி கிடைக்கவில்லை. தற்போது மழை பெய்து வருவதால் வீடு எந்நேரமும் இடிந்து விழும் அபாயம் உள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் கருணை கூர்ந்து உடனடியாக பசுமை வீடு கட்டித் தர வேண்டும். அதோடு, தம்பிகளோடு தங்கையையும் பள்ளியில் சேர்த்து படிக்க உதவி செய்ய வேண்டும்’ என உருக்கமான வேண்டுகோள் விடுத்தார்.

x