திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் கனமழை வெளுத்து வாங்கியதால் குடியிருப்பு பகுதிகளை மழைநீர் சூழ்ந்தது.
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வருகிறது. இதன் தாக்கம், திருவண்ணாமலை மாவட்டத்திலும் எதிரொலிக்கிறது. மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் கடந்த 5 நாட்களாக இரவு நேரத்தில் மழை கொட்டி தீர்த்து வருகிறது.
இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை இடி, மின்னல், காற்றுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்கியது. ஜவ்வாது மலையில் பெய்த மழையால், மலையடிவாரத்தில் உள்ள செண்பகத்தோப்பு அணை, மிருகண்டா நதி அணை மற்றும் குப்பநத்தம் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேலும் செய்யாறு, கமண்டல நதி, நாக நதியிலும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
மஞ்சளாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், அத்திமூர் கிராமத்தை மழை நீர் சூழ்ந்ததால் கிராம மக்கள் அவதிப்பட்டனர். கரையோரங்களில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு வருவாய் துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறையினர் மூலம் அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்.
இதேபோல் திருவண்ணாமலையில் நகரைச் சுற்றி உள்ள புறநகர் பகுதியில் தாழ்வான இடங்கள் மற்றும் குடியிருப்புகளை மழை நீர் சூழ்ந்தது. வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் மழைநீரால் மக்கள் சிறைபிடிக்கப்பட்டனர்.
கீழ்நாத்தூர் பகுதியில் மழைநீர் சூழ்ந்ததைக் கண்டித்து, அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஏரிகள், குளங்களில் நிரம்பின. ஏரிகளில் இருந்து தண் ணீருடன் வெளியேறிய மீன்களை சிறுவர்கள் உள்ளிட்டோர் பிடித்துச் சென்றனர். துரிஞ்சலாறு மற்றும் ஓடைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது.
கிரிவல பாதையில் 2 மரங்களும், கடலூர்-சித்தூர் சாலையில் சில இடங்களில் வேரோடு மரங்கள் சாய்ந்தன. நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் ஞானவேல் மேற்பார்வையில், உதவி செயற்பொறியாளர் அன்பரசு மற்றும் உதவி பொறியாளர் சசிகுமார் ஆகியோர் முன்னிலையில் சாலையில் விழுந்த மரங்கள் அகற்றப்பட்டன. இதேபோல் போளூரில் இருந்து ஜவ்வாது மலைக்கு செல்லும் சாலையில் முறிந்து விழுந்த மரங்களும் அகற்றப்பட்டன.
சந்தவாசல் மற்றும் கண்ண மங்கலம் அருகே பெய்த மழையால் பலநூறு ஏக்கர் விவசாய நிலங்கள் மழை நீரில் மூழ்கின. அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சேதமடைந்தன. இதற்கு இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சந்தவாசல் பகுதியில் வாழை மரங்களும் சேதமடைந்துள்ளன. ஜவ்வாதுமலையில் உள்ள பீமன் நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்து தண்ணீர் கொட்டுவதால், குளிப்பதற்கு வனத்துறை தடை விதித்துள்ளது.
தண்டராம்பட்டில் 108 மி.மீ.,: மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் நேற்று காலை 8.30 மணி நிலவரப்படி அதிகபட்சமாக தண்டராம்பட்டு பகுதியில் 108.40 மி.மீ., மழை பெய்துள்ளது. திருவண்ணாமலையில் 64 மி.மீ., செங்கத்தில் 82.40 மி.மீ., போளூரில் 70 மி.மீ., ஜமுனாமரத்தூரில் 5.20 மி.மீ., கலசப் பாக்கத்தில் 68 மி.மீ., ஆரணியில் 7 மி.மீ., வந்தவாசியில் 22 மி.மீ., கீழ்பென்னாத் தூரில் 55.60 மி.மீ., வெம்பாக்கத்தில் 4 மி.மீ., சேத்துப்பட்டில் 8.20 மி.மீ., மழை பெய்துள்ளது. மாவட்டத்தில் சராசரியாக 41.23 மி.மீ., மழை பெய்துள்ளது. செய்யாறு மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் அதிகளவு மழை பொழியவில்லை. 3 கால்நடைகள் உயிரிழந்துள்ளன.