கனமழையால் அரூர் அருகே வள்ளி மதுரை அணை நீர் மட்டம் 5 நாளில் 3 அடி உயர்வு


அரூர்: கொட்டித் தீர்க்கும் கோடை மழையால், தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள வள்ளி மதுரை அணையின் நீர் மட்டம் 5 நாட்களில் 3 அடி உயர்ந்தது.

தருமபுரி மாவட்டம், அரூர் அருகேயுள்ள சித்தேரி மலைப்பகுதியின் அடிவாரத்தில், வள்ளி மதுரை வரட்டாறு அணை அமைந்துள்ளது. இந்த அணையின் மொத்தக் கொள்ளளவு 34.50 அடியாகும். இந்த அணையின் மூலம் வள்ளி மதுரை, கீரைப்பட்டி, வாழைத் தோட்டம், தாதராவலசை, குடிமியாம்பட்டி, எல்லப்புடையாம்பட்டி உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 5,108 ஏக்கர் விளைநிலம் பாசன வசதி பெறுகிறது.

சித்தேரி மலைப்பகுதியை நீர் ஆதாரமாக கொண்டுள்ள, வள்ளி மதுரை வரட்டாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த 5 தினங்களாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக, காட்டாறுகள், சிற்றோடைகள் மூலம் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வந்தது. கடந்த இரு தினங்களாக பெய்த கனமழை காரணமாக, அணையின் நீர் மட்டம் கடநத 3 நாட்களில் 20 அடியில் இருந்து இன்று 23 அடியாக உயர்ந்தது.

இதனிடையே, அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்து வருவதால், அணையின் நீர் மட்டம் மேலும் உயரம் வாய்ப்புள்ளதாக பொதுப்பணித்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.

x