ஆசிரியர் நியமனத்தில் மாவட்ட ஒதுக்கீடு வேண்டும்: பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்


சென்னை: வடமாவட்டங்களில் ஆசிரியர் காலி பணியிடங்கள் அதிகரித்துள்ளதால், ஆசிரியர் நியமனத்தில் மாவட்ட ஒதுக்கீட்டை செயல்படுத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் உள்ள 10 ஆயிரத்துக்கும் கூடுதலான ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக தெரியவந்திருக்கிறது. காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களில் 72.32 சதவீத பணியிடங்கள் வட மாவட்டங்களில் இருப்பதாக தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டிருக்கும் புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

கல்வி உள்ளிட்ட அனைத்து அம்சங்களிலும் வடக்கு மாவட்டங்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதும், அதை அரசு வேடிக்கைப் பார்ப்பதும் கண்டிக்கத்தக்கது. அதேநேரத்தில் சென்னை, பெரம்பலூர், மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 10 மாவட்டங்களில் ஒரு பணியிடம் கூட காலியாக இல்லை.

இவற்றில் சென்னை, பெரம்பலூர் தவிர மீதமுள்ள 8 மாவட்டங்கள் தென் தமிழகத்தைச் சேர்ந்தவை என்பதும், இந்த மாவட்டங்கள் தான் 10 மற்றும் மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்ச்சி விகிதங்களில் முதன்மை இடங்களைப் பிடித்திருக்கின்றன. ஆசிரியர் பணியிடங்கள் அதிக அளவில் காலியாக இருக்கும் வட மாவட்டங்கள் தான் தேர்ச்சி விகிதத்தில் கடைசி இடங்களில் உள்ளன.

இடை நிலை ஆசிரியர் பணியிடங்களில் மட்டுமல்ல, பட்டதாரி ஆசிரியர், முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களிலும் இதே நிலை தான் காணப்படுகிறது. மாவட்ட அளவிலான பணி நியமன முறை கைவிடப்பட்டு, மாநில அளவிலான பணி நியமன முறை அறிமுகம் செய்யப்பட்ட நாளில் இருந்தே வடமாவட்டங்களில் போதிய எண்ணிக்கையில் ஆசிரியர்கள் பணி புரிவது இல்லை.

அதனால் தான் வட மாவட்டங்களில் காலியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. கல்வியின் தரமும் ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருகிறது. இதற்கான ஒரே தீர்வு வட மாவட்டங்களை கல்வியில் பின்தங்கிய மண்டலமாக அறிவித்து, அந்த மண்டலத்துக்கான ஆசிரியர்கள் நியமனங்களில் மாவட்ட ஒதுக்கீட்டு முறையை செயல்படுத்துவது தான்.

இந்த முறையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்தந்த மாவட்டங்களைச் சேர்ந்தவர்களே பள்ளி ஆசிரியர்களாக நியமிக்கப்படுவார்கள் என்பதால், அவர்கள் வேறு மாவட்டங்களுக்கு மாறுதல் பெற்று செல்ல மாட்டார்கள். சொந்த மாவட்டம் என்பதால் கூடுதல் அக்கறையுடன் பணி செய்வார்கள். எனவே, வட மாவட்ட ஆசிரியர் நியமனத்தில் மாவட்ட ஒதுக்கீட்டை செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

x