சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று வெளியிட்ட அறிக்கை: சுதந்திர தினத்தன்று தேசிய கொடியை ஏற்றி கொண்டாடுவதற்கு அனைவருக்கும் உரிமை இருக்கிறது. ஆனால் பிரதமர் மோடியின் அறிவுறுத்தலின்பேரில் வழக்கத்துக்கு மாறாக மாநிலங்களில் தேசிய கொடி அணிவகுப்பு நடத்தி சொந்தம் கொண்டாட முற்படுவதற்கு பாஜகவுக்கு எந்த உரிமையும் இல்லை.
எனவே, வரும் 78-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 12-ம் தேதி (இன்று) முதல் ஆகஸ்ட் 15-ம் தேதி வரை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் தேசியக் கொடி பொருத்தப்பட்ட இருசக்கர வாகன அணிவகுப்பை நடத்த வேண்டும். இதை தவிர வட்டார, நகர, பேரூர், கிராமங்களில் தேசியக் கொடியை தாங்கி பாதயாத்திரை நடத்தி விடுதலைப் போராட்ட வரலாற்றையும், தேச தந்தை காந்தியடிகளின் பங்களிப்பையும் விளக்கும் வகையில் கூட்டங்களை நடத்த வேண்டும்.
இதன்மூலம் தேசியக் கொடியோடு காங்கிரஸுக்கு இருக்கிற உரிமையையும், கொடியின் பெருமையை காக்க திருப்பூர் குமரன் போன்றவர்கள் செய்த தியாகத்தையும் மக்களிடையே பறைசாற்றி நினைவு கூறுகிற வகையில் சுதந்திர தின விழாவை சீரும், சிறப்புமாக நடத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.