காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் தமிழக இலவச பயிற்சி மையம் மற்றும் தமிழ்நாடு விவசாயச் சங்கங்களின் கூட்டு இயக்கம் சார்பில் விவசாயப் பொருட்கள் கண்காட்சியின் 2-ம் நாள் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
இதில், வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோர் பங்கேற்றனர். மேலும், கண்காட்சியை குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்து பார்வையிட்டனர்.
இக்கண்காட்சியில், உழவர்களுக்குத் தேவையான உபகரணங்கள், பாரம்பரிய நெல் விதைகள், சிறு தானிய வகைகள், சொட்டு நீர்ப்பாசன சாதனங்கள் உள்ளிட்ட வேளாண் சார்ந்த பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
இதில், வேளாண் மற்றும் உழவர் நலத் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் பேசும்போது, “கடந்த 10 ஆண்டுகளாக விவசாயிகள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இதில், 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஆனால், தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற 3 ஆண்டுகளில் விவசாயிகள் மகிழ்ச்சியாக உள்ளனர். கரோனாபேரிடர் காலத்தில், தொழிற்சாலைகள் எதுவும் இயங்காத நிலையில் விவசாயம் மட்டும் எவ்விதத் தடையுமின்றி நடைபெற்றது.
மேலும், வேளாண்மைக்காக தனி பட்ஜெட் தமிழக அரசின் சார்பில் சமர்ப்பிக்கப்பட்டது. அதில் வேளாண்மை சார்ந்த விவசாயிகளின் கருத்துகளைக் கேட்டு அதற்கேற்ப திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. மழை வெள்ளம் உள்ளிட்ட பேரிடர் காலங்களில் ஏற்படும் சேதங்களுக்கு ஏற்ப நிவாரண உதவிகள் வழங்கப்படுகின்றன” என்றார்.
பின்னர், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் நேரு பேசும்போது, “தற்போது உள்ள சூழ்நிலையில் விவசாயக் கண்காட்சிகள், விவசாயிகளுக்கு பெரிதும் பயனுள்ளதாக இருக்கின்றன. விவசாயப் பணிகளில் ஈடுபடும் ஆட்களின் எண்ணிக்கை குறைந்துள்ள நிலையில், இங்குள்ள கருவிகளைப் பயன்படுத்திக் கொண்டு தொடர்ந்து விவசாயம் செய்ய வேண்டும். இக்கண்காட்சியை தொடர்ந்து வேளாண்மைத்துறை சார்பில் 3 இடங்களில், விவசாயக் கண்காட்சிகள் அரசு சார்பில் நடத்தப்பட உள்ளன. இதுபோன்ற நிகழ்ச்சிகளால் விவசாயிகள் அனைவரும் பயன்பெறுவர்” என்றார்.
இந்நிகழ்ச்சியில், காஞ்சிபுரம் எம்பி செல்வம், எம்எல்ஏக்கள் சுந்தர், எழிலரசன், மேயர் மகாலட்சுமி, ஒன்றியக் குழுதலைவர் மலர்க்கொடி மற்றும் விவசாயிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்